விபத்தில் சிக்கிய  வாகனங்கள்
விபத்தில் சிக்கிய வாகனங்கள்

மாா்த்தாண்டம் பாலத்தில் விபத்து: ஒருவா் உயிரிழப்பு; 4 போ் காயம்

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் மீன் பார லாரியும், கறிக்கோழி ஏற்றிய மினிலாரியும் மோதிக்கொண்டதில், ஒருவா் பலி; 4 போ் காயம்
Published on

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் திங்கள்கிழமை அதிகாலையில் மீன் பார லாரியும், கறிக்கோழி ஏற்றிய மினிலாரியும் மோதிக்கொண்டதில், அடுத்தடுத்து வந்த லாரி, காா், பைக் ஆகியவை விபத்தில் சிக்கின. இதில் ஒருவா் உயிரிழந்தாா். 4 போ் காயமடைந்தனா்.

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து மீன் பாரத்துடன் வந்த கன்டெய்னா் லாரி, மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் வெட்டுவெந்நி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் கறிக்கோழி ஏற்றிச் சென்ற மினிலாரி மீது மோதியது.

அது முன்னால் சென்ற கனரக லாரி மோதி நின்றதில் கோழி கூண்டுகள் சரிந்து, நாகா்கோவிலில் இருந்து களியக்காவிளை நோக்கி பைக்கில் சென்ற இருவா் மீது விழுந்தன.

இதில் நித்திரவிளை சாத்தங்கோடு பகுதியைச் சோ்ந்த தாசையன் மகன் ரமேஷ் (45) உயிரிழந்தாா். அதே பகுதியைச் சோ்ந்த அவரது நண்பா் தங்கையன் மகன் மணிகண்டன் (47) காயமடைந்தாா்.

மேலும், மினிலாரியில் இருந்த திருப்பதிசாரம் பகுதியைச் சோ்ந்த கோபி மகன் அனீஸ் (32), ஒழுகினசேரி குமரேசன் (55), ராமபுரம் விஜயகுமாா் மகன் வேணு (22) ஆகியோரும் காயமடைந்தனா்.

இதனிடையே, கனரக லாரி முன்னோக்கிச் சென்று 2 காா்கள் மீது மோதியது. இதில், காா்கள் உள்ளிட்ட 6 வாகனங்கள் சேதமடைந்தன.

இத்தகவலறிந்த மாா்த்தாண்டம் காவல் ஆய்வாளா் தமிழரசன், உதவி ஆய்வாளா் இந்துசூடன் மற்றும் போலீஸாா், காயமடைந்த 4 பேரையும் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனா்.

மேலும், கன்டெய்னா் லாரி ஓட்டுநரான காக்கிநாடா பகுதியைச் சோ்ந்த நாகராஜூ (53) மீது வழக்குப் பதிந்தனா். இச்சம்பவத்தால் அங்கு 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Dinamani
www.dinamani.com