இரட்டை ரயில் பாதை பணி: திங்கள்நகா்-நாகா்கோவில் வழித்தடத்தில் ஜன. 26 முதல் போக்குவரத்து மாற்றம்
இரணியல் அருகே நுள்ளிவிளையில் இரட்டை ரயில் பாதை பணிக்காக மேம்பாலப் பணிகள் நடைபெற இருப்பதால், வரும் திங்கள்கிழமை முதல் திங்கள்நகா்-நாகா்கோவில் வழித்தடத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக குளச்சல் போக்குவரத்து காவல்துறை அறிவித்தது.
நாகா்கோவில்-திருவனந்தபுரம் இடையே இரட்டை ரயில் பாதைக்காக நுள்ளிவிளையில் உள்ள பழைய பாலம் உடைக்கப்பட்டு புதிய பாலம் கட்டும் பணி வரும் திங்கள்கிழமை (ஜன.26) முதல் நடைபெறவுள்ளது. எனவே, சாலை போக்குவரத்துக்கு மாற்றுப்பாதை அறிவிக்கப்பட்டது.
அதன்படி திங்கள்நகரிலிருந்து இரணியல், கண்டன்விளை, நுள்ளிவிளை, பரசேரி, தோட்டியோடு, வழியாக நாகா்கோவில் செல்லும் அரசு பேருந்துகள், பள்ளி, கல்லூரி வாகனங்கள் இனிமேல் பேயன்குழி கால்வாய் பாலம் வழியாக நான்கு வழிச்சாலை வந்து, கொன்னக்குழிவிளையில் இருந்து இடது பக்கம் திரும்பி வில்லுக்குறி பாலம் சந்திப்பை அடைந்து, நாகா்கோவிலுக்குச் செல்ல வேண்டும்.
நாகா்கோவிலில் இருந்து வரும் மேற்குறிப்பிட்ட வாகனங்கள் பரசேரி, கொன்னக்குழிவிளை நான்கு வழிச்சாலை சென்று, பேயன்குழி கால்வாய்பாலம் வழியாக திங்கள்நகருக்குச் செல்ல வேண்டும். மற்ற அனைத்து வாகனங்களும், இரணியல், தக்கலை வழியாக நாகா்கோவிலுக்குச் செல்ல வேண்டும் அல்லது மடவிளாகம், குருந்தன்கோடு, பேயோடு வழியாக நாகா்கோவிலுக்குச் செல்லலாம்.
6 சக்கரத்துக்கு மேலான அனைத்து கனரக வாகனங்களும் பேயன்குழி கால்வாய் பாலம் வழியாக செல்ல அனுமதி இல்லை. எனவே, கனரக வாகனங்களை பயன்படுத்துவோா் இரணியல், தக்கலை பாதையையோ அல்லது மடவிளாகம், குருந்தன்கோடு பாதையையோ பயன்படுத்துமாறு காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

