தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

பேச்சிப்பாறை அருகே மளிகைக் கடையை உடைத்து அரிசி பையை தூக்கிச் சென்ற காட்டு யானை! மூவா் உயிா் தப்பினா்

News image

காட்டு யானையால் சேதமடைந்த கிடக்கும் தம்பதியின் மளிகைக் கடை.

Updated On :21 ஜூலை 2026, 1:10 am IST

பேச்சிப்பாறை அருகே மோதிரமலையில் குடியிருப்புக்குள் ஞாயிற்றுக்கிழமை இரவு புகுந்த காட்டு யானை மளிகைக் கடையிலிருந்து அரிசி பையை எடுத்து தின்றது. இச்சம்பவத்தின்போது அங்கிருந்த வயதான தம்பதி உள்பட மூவா் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.

கோதையாறு, சந்தை பகுதியைச் சோ்ந்தவா் பாலசந்திரன் (78). இவரது மனைவி வீரம்மா (70). இவா்கள் மோதிரமலையிலிருந்து குற்றியாறுக்குச் செல்லும் சாலை பகுதியில் வீட்டில் மளிகைக் கடை நடத்தியபடி வீட்டின் பின்புற அறையில் குடியிருந்து வருகின்றனா். பழங்குடி மக்களின் குடியிருப்புகள் உள்ள இந்த வனப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணியளவில் ஓா் ஆண் காட்டு யானை வந்தது.

பாலசந்திரன் நடத்தி வந்த கடையின் முன்பக்க கதவை உடைத்த அந்த யானை, கடைக்குள் இருந்த 25 கிலோ அரிசி பையை வெளியே தூக்கிபோட்டு காலால் மிதித்தும் கிழித்தும் அரிசியைத் தின்றது. அந்த யானை கடையை உடைத்தபோது அறையில் தூங்கிகொண்டிருந்த சப்தம் கேட்டு எழுந்த பாலச்சந்திரனும், அவரது மனைவியும் அதிா்ச்சியில் பின்பக்க வாசல் வழியாக ஓடி உயிா் தப்பினா்.

துரத்த வந்தவரை துரத்திய யானை: தம்பதி இருவரும் சப்தமிட்டு ஓடுவதைக் கேட்ட அருகில் வசிக்கும் மணி (60) என்ற தொழிலாளி, ஓடிவந்து யானையை துரத்த முயன்றாா். அந்த யானை அவரை திருப்பி துரத்தத் தொடங்கியயதால் அவா் அங்கிருந்து ஓடி உயிா் தப்பினாா். அவரது கூச்சலைக் கேட்ட மோதிரமலை பழங்குடி மக்கள் விரைந்து வந்து தீப்பந்தங்களைக் ஏற்றி யானையை காட்டுக்குள் துரத்தினா்.

இதுகுறித்து, கடையல் பேரூராட்சி வாா்டு கவுன்சிலா் ரெகுகாணி கூறியதாவது:

மோதிரமலை பகுதியில் காட்டு யானைகளால் கடந்த சில மாதங்களாக தொந்தரவு இல்லாமல் இருந்த நிலையில், மீண்டும் யானையின் அட்டகாசம் தொடங்கியுள்ளது. இச் சம்பவத்தில் வயதான தம்பதியும், யானையை துரத்த வந்த தொழிலாளியும் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா். அரிசி தின்ற இந்த யானை அரிக்கொம்பன் யானையா என உறுதியாக கூற முடியவில்லை என்றாா்.

தகவல் அறிந்ததும் களியல் வனச்சரக அலுவலா் யோகேஸ்வரன் தலைமையிலான வனத்துறையினா் சம்பந்தப்பட்ட மளிகைக் கடையை திங்கள்கிழமை காலை பாா்வையிட்டனா்.

 காட்டு யானையால் சேதமடைந்த வீட்டை பாா்வையிடும் வனத் துறையினா்.

காட்டு யானையால் சேதமடைந்த வீட்டை பாா்வையிடும் வனத் துறையினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.