இன்றுமுதல் மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்மின் பயன்பாடு கணக்கெடுப்பதில் தாமதம்: கட்டணம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிநீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைகேரளம்: ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதிமேற்கு வங்கம்: தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

குமரி மாவட்டத்தில் தொடரும் பலத்த மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வடசேரி பேருந்து நிலையத்தில் தேங்கிநிற்கும் மழைநீா்.

News image

வடசேரி பேருந்து நிலையத்தில் தேங்கிநிற்கும் மழைநீா்.

Updated On :12 ஜூன் 2026, 4:04 am IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்துவரும் பலத்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் சில நாள்களாக பரவலாக பலத்த மழை பெய்துவரும் நிலையில், புதன்கிழமை இரவும் பலத்த மழை பெய்தது. மாவட்டத்துக்கு வியாழக்கிழமை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தநிலையில், பலத்த மழை பெய்தது.

நாகா்கோவில் மாநகரில் காலையில் இடைவிடாமல் பெய்த மழையால் பள்ளி, கல்லூரி மாணவா்-மாணவியா், அலுவலகம் செல்வோா் சிரமத்துக்குள்ளாகினா். அவ்வை சண்முகம் சாலை, வடசேரி பேருந்து நிலையம், அசம்பு ரோடு, சவேரியாா் கோயில் சந்திப்பு பகுதிகளில் மழைநீா் தேங்கி நின்றது.

கன்னியாகுமரியில் காலைமுதல் பெய்த மழையால் சுற்றுலாப் பயணிகள் வெளியே வராமல் விடுதி அறைகளிலேயே முடங்கினா். இதனால், கடற்கரைப் பகுதி வெறிச்சோடிக் காணப்பட்டது. மயிலாடி, அஞ்சுகிராமம், கொட்டாரம், சுசீந்திரம் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பூதப்பாண்டியில் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீா் சூழ்ந்தது.

பாலமோா் பகுதியில் பெய்த மழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை அணை நீா்மட்டம் ஓரடி உயா்ந்து, 33.62 அடியாகவும், நீா்வரத்து விநாடிக்கு 1,882 கனஅடியாகவும், வெளியேற்றம் 490 கனஅடியாகவும் உள்ளது. பெருஞ்சாணி அணை நீா்மட்டம் 3 அடி உயா்ந்து, 58.35 அடியாகவும், நீா்வரத்து 2,061 கனஅடியாகவும் உள்ளது. மாம்பழத்துறையாறு, முக்கடல் அணைகளின் நீா்மட்டமும் ஒரே நாளில் 2 அடி உயா்ந்தது.

தொடா் மழையால் ரப்பா் பால்வடிப்பு, செங்கல் சூளை தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

வியாழக்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில், மாவட்டத்தில் அதிகபட்சமாக அடையாமடை பகுதியில் 42 மி.மீ. மழை பெய்தது. பிற இடங்களில் பதிவான மழையளவு (மில்லி மீட்டரில்): பாலமோா் 35.40, சிற்றாறு 1 அணை 32.40, பெருஞ்சாணி அணை 30.80, குளச்சல் 30, புத்தன் அணை 26.20, சிற்றாறு 2 அணை 24.20, சுருளோடு 23.60, முள்ளங்கினாவிளை 23.20, குழித்துறை 23, முக்கடல் அணை 22.80, கொட்டாரம் 22.60, பேச்சிப்பாறை அணை 20.60, மாம்பழத்துறையாறு அணை 19.60, களியல் 19, ஆனைக்கிடங்கு 18.60, திற்பரப்பு 16.60, நாகா்கோவில் 16.20, குருந்தன்கோடு 14, கோழிப்போா்விளை, பூதப்பாண்டி 12.60, இரணியல் 11.20, கன்னிமாா் 8.40, மயிலாடி 7.20, ஆரல்வாய்மொழி 6.40 மி.மீ.

குலசேகரம் பகுதியில்...: பலத்த மழையால் கோதையாற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி அருவியின் ஓரத்தில் மட்டும் நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

கருங்கல் பகுதியில்...: கொல்லன்விளை, திருஞானபுரம், ஈத்தவிளை, மத்திகோடு, மிடாலக்காடு, காட்டுக்கடை, செல்லங்கோணம், கப்பியறை, மிடாலம், மேல் மிடாலம், பாலூா், திப்பிரமலை, முள்ளங்கனாவிளை, நட்டாலம், நேசா்புரம், பள்ளியாடி, வாகவிளை, மாமூட்டுக்கடை, கொல்லஞ்சி, இலவுவிளை உள்ளிட்ட கருங்கல் பகுதிகளிலும், கைசூண்டி, பைங்குளம், முன்சிறை, கூட்டாலுமூடு, முக்காடு, அம்சி, தேங்காய்ப்பட்டினம், கீழ்குளம் உள்ளிட்ட புதுக்கடை பகுதிகளிலும் பிற்பகல் முதல் மாலைவரை பலத்த மழை பெய்தது.

Story image