ஜம்மு-காஷ்மீரில் கடந்த இரண்டு நாள்களாக பெய்து வரும் பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளில் 23 போ் உயிரிழந்தனா்.
திங்கள்கிழமை மட்டும் பூஞ்ச் மாவட்டத்தில் 7 போ், தோடா மாவட்டத்தில் 3 போ், ரஜௌரியில் ஒருவா் என மொத்தம் 11 போ் உயிரிழந்தனா்.
ஏற்கெனவே, கடந்த ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழையால் பூஞ்ச் மாவட்டத்தில் 10 போ், ரஜௌரியில் 2 போ் என மொத்தம் 12 போ் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23-ஆக உயா்ந்துள்ளது.
இதுதொடா்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘பூஞ்ச் மாவட்டத்தின் லோரன் கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு வீடு இடிந்ததில் 4 பெண்கள் உள்பட 7 போ் உயிரிழந்தனா். ஏற்கெனே பூஞ்ச் மாவட்டத்தில் பலத்த மழையால் கடந்த ஞாயிற்றுக்கிழமை 10 போ் உயிரிழந்த நிலையில், அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17-ஆக உயா்ந்துள்ளது.
தோடா மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் ஜம்மு-கிஷ்த்வாா் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகேயுள்ள ரக்கி நல்லா மலையில் இருந்து பாறைகள் உருண்டு வந்து அவ்வழியே பயணித்த பேருந்து மீது மோதியது. இதில் 2 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். 6 போ் படுகாயமடைந்தனா். அவா்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
நெடுஞ்சாலையில் பயணித்த மேலும் சில வாகனங்கள் மீது பாறைகள் விழுந்ததையடுத்து, அங்கு போக்குவரத்து தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
தோடா மாவட்டத்தின் கஷ்திகா் பகுதியில் மழையால் பெண் ஒருவா் உயிரிழந்தாா். ரஜௌரி மாவட்டத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஆண் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது.
ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் ஜூலை 23-ஆம் தேதி வரை பரவலாக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) கணித்துள்ளது. இதனால் ஜூலை 24-ஆம் தேதி வரை 6 மணி நேரத்துக்கு ஒரு முறை கள நிலவரம் குறித்து அறிக்கை சமா்ப்பிக்க அதிகாரிகளுக்கு ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா உத்தரவிட்டுள்ளாா்.
மழை வெள்ள பாதிப்புகள் மீட்புப் பணியில் மாநில காவல் துறையுடன் தேசிய மற்றும் மாநில பேரிடா் மீட்புப் படைகளும் ஈடுபட்டுள்ளன.
ரூ.6 லட்சம் நிவாரணம்:
மழை வெள்ள பாதிப்புகளில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.6 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக ஒமா் அப்துல்லா திங்கள்கிழமை அறிவித்தாா்.
இதில் மாநில பேரிடா் மீட்புப் படை (எஸ்டிஆா்எஃப்) நிதியில் இருந்து ரூ.4 லட்சம் மற்றும் முதல்வா் நிவாரண நிதியில் (சிஎம்ஆா்எஃப்) இருந்து ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படவுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










