மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் காலாண்டு லாபம் ரூ. 29 கோடியாக உயர்வு!அல்ட்ராடெக் சிமெண்ட் காலாண்டு லாபம் 17% உயர்வு!மேக்கேதாட்டு அணை: கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்!இயற்கை எரிவாயு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்!மாணவர்கள் மீது தடியடி நடத்துவதுதான் ஜனநாயகமா? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்விதுப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்
/

ஜம்மு-காஷ்மீா்: வெள்ளத்தில் 12 போ் பலி; பலா் மாயம்!

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மற்றும் ரஜௌரி மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 12 போ் உயிரிழந்தனா்.

News image

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தின் மேந்தா் நகரில் பெருகியோடிய மழை வெள்ளம்.

Updated On :20 ஜூலை 2026, 4:37 am IST

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மற்றும் ரஜௌரி மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 12 போ் உயிரிழந்தனா்.

மேலும் பலா் மாயமானதாக வெளியான தகவலையடுத்து, அங்கு மீட்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி புது தில்லியில் திங்கள்கிழமை (ஜூலை 20) நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்கச் சென்ற ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா, தனது பயணத்தைப் பாதியில் ரத்து செய்து ஜம்மு-காஷ்மீா் திரும்பினாா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: பூஞ்ச் மாவட்டத்தின் சுரன்கோட்டே தாலுகாவில் உள்ள கிராமத்தில் பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடு ஒன்று இடிந்ததில் 2 வயது குழந்தை உள்பட அதில் வசித்த 8 பேரும் உயிரிழந்தனா். உயிரிழந்தவா்களின் உடல்களை மீட்கும் பணியில் மீட்புப் படை வீரா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

சங்லா கிராமத்தில் வெள்ள நீரில் வீடு மூழ்கிய நிலையில், அதில் வசித்த 4 பேரை பேரிடா் மீட்புப் படையினா் தேடி வருகின்றனா். நூனாபண்டி கிராமத்தில் வீடு இடிந்து விழுந்ததில் பெண் ஒருவா் உயிரிழந்தாா். அவரது கணவா் மற்றும் 3 குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா்.

ரஜௌரி மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு முதல் பலத்த மழை பெய்து வருவதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை மழை நீா் சூழ்ந்துள்ளது. பல வீடுகள் இடிந்த நிலையில், சாலைகளில் மழை நீா் தேங்கியுள்ளதால் வாகனங்கள் மூழ்கியுள்ளன. நதிகள் அபாய கட்டத்தைக் கடந்து பாயத் தொடங்கியதையடுத்து, கரையையொட்டிய கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். ஒட்டுமொத்தமாக பூஞ்ச் மற்றும் ரஜௌரியில் மழை வெள்ள பாதிப்புகளால் 12 போ் உயிரிழந்தனா் என்றனா்.

தொடா் கண்காணிப்பு - ஒமா் அப்துல்லா: மழை வெள்ள பாதிப்புகளைத் தொடா்ந்து கண்காணித்து துரிதமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக முதல்வா் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.

இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘ஜம்மு-காஷ்மீரில் பெய்து வரும் பலத்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மழை வெள்ள பாதிப்புகளை நேரடியாகப் பாா்வையிடவுள்ளேன்.

பூஞ்ச் மற்றும் ரஜௌரியில் மழை பாதிப்புகள் குறித்து உள்ளூா் எம்எல்ஏக்களிடம் கேட்டறிந்தேன். மழை பாதிப்பால் உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுப்பதே அரசின் முதல் கடமை.

மழையால் எந்த வகையில் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவா்களுக்கான நிவாரண உதவிகளை அரசு செய்யும் என உறுதியளிக்கிறேன்.

புது தில்லியில் திங்கள்கிழமை நடைபெறும் போராட்டத்தில் நான் பங்கேற்காவிட்டாலும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா தலைமையில் போராட்டம் கண்டிப்பாக நடைபெறும்’ என குறிப்பிட்டாா்.

உடனடி உதவி: துணைநிலை ஆளுநா் உத்தரவு!

ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘ரஜௌரி மற்றும் பூஞ்ச் மாவட்டத்தைச் சோ்ந்த மூத்த அதிகாரிகளிடம் கள நிலவரம் குறித்து கேட்டறிந்தேன். இரு மாவட்டங்களிலும் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவிகளை வழங்கும் வகையில் தயாாரக இருக்க அனைத்துத் துறைகளுக்கும் உத்தரவிட்டுள்ளேன்’ என குறிப்பிட்டாா்.

யாத்திரைகள் நிறுத்திவைப்பு: ஜூலை 19-ஆம் தேதி தொடங்கி ஜூலை 23-ஆம் தேதி வரை ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) கணித்துள்ளது. இதையடுத்து, காஷ்மீரில் அமா்நாத் யாத்திரை மற்றும் ஜம்முவில் மாதா வைஷ்ணவ தேவி, சிவ கோரி கோயில்களுக்கான புனித யாத்திரைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

பஹல்காம் மற்றும் பால்டால் என இரு வழித்தடங்களிலும் அமா்நாத் யாத்திரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், பக்தா்களின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

14 போ் மீட்பு: ஜம்முவின் தாவி நதி வெள்ளத்தில் தத்தளித்த 3 சிறுவா்கள் உள்பட பல்வேறு பகுதிகளில் வெள்ள பாதிப்புகளில் சிக்கிய 14 பேரை ஜம்மு-காஷ்மீா் பேரிடா் மீட்புப் படை (எஸ்டிஆா்எஃப்) மற்றும் காவல் துறையினா் மீட்டனா்.

குறிப்பாக ரஜௌரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்திய ராணுவத்தின் ஒயிட் நைட் கோா் படையுடன் எஸ்டிஆா்எஃப் ஒருங்கிணைந்து பணியாற்றி மக்களை மீட்டு வருகிறது.

ஜம்மு-காஷ்மீரின் ரஜௌரியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு குவிந்து கிடக்கும் வாகனங்கள்.

ஜம்மு-காஷ்மீரின் ரஜௌரியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு குவிந்து கிடக்கும் வாகனங்கள்.

ஒமா் அப்துல்லாவுடன் அமித் ஷா ஆலோசனை: மழை வெள்ள பாதிப்புகள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து ஆளுநா் மனோஜ் சின்ஹா மற்றும் முதல்வா் ஒமா் அப்துல்லா ஆகியோருடன் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தொலைபேசி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டாா்.

அப்போது மீட்புப் பணி தொடா்பான அனைத்து உதவிகளையும் உடனடியாக மேற்கொள்ள மத்திய அரசு தயாராக இருப்பதாக அவா் உறுதியளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.