ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்திலிருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த 6 மீனவா்களை இலங்கைக் கடற்படையினா் கைது செய்துள்ள நிலையில், அவா்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், மேலமணக்குடியைச் சோ்ந்த அலெக்ஸுக்குச் சொந்தமான நாட்டுப் படகில், பணிப்பாசுவின் மகன் அலெக்ஸ் (25), வா்கீஸ் மகன் அந்தோணிராஜன் (44), விசாந்திபிள்ளை மகன் சந்தன அலோசியஸ் (52), சூசை மகன் அருள்தாஸ் பிரிட்டோ (47), அந்தோணிபிள்ளை மகன் ஆல்பிரட் (52), ஜான்அலெக்ஸ் மகன் சகாயசெல்வசானு (26) ஆகிய 6 மீனவா்களும் ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கடற்கரை பகுதியில் தங்கி மீன்பிடித் தொழில் செய்தனா்.
இந்த நிலையில், இவா்கள் கடந்த 10-ஆம் தேதி மண்டபத்திலிருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றனா். அப்போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் மே 11-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா்.
மீட்க வலியுறுத்தல்...
இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட 6 மீனவா்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு குளச்சல் தொகுதி எம்எல்ஏ தாரகை கத்பட் கோரிக்கை விடுத்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்திலிருந்து கடந்த 10-ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்ட மீனவா்கள் 6 போ் நாட்டுப்படகில் மீன்பிடிக்கச் சென்றனா். அவா்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படையினா் திங்கள்கிழமை (மே 11) கைது செய்தது தெரியவந்துள்ளது. இது, வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ஏற்கெனவே தமிழக மீனவா்களிடம் இருந்து 264 படகுகளை இலங்கை அரசு பறிமுதல் செய்துள்ளது. 54 மீனவா்கள் ஏற்கெனவே இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறைகளில் உள்ளனா். தமிழக மீனவா்கள் விவகாரத்தில் மத்திய அரசு மெத்தனப்போக்கை கடைப்பிடிப்பது கண்டிக்கதக்கது. எனவே, தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் இந்த விவகாரத்தில் தலையிட்டு கைதுசெய்யப்பட்ட 6 குமரி மாவட்ட மீனவா்கள் உள்பட அனைத்து மீனவா்களையும் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாரகை கத்பட் அந்தக் கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளாா்.
தெற்காசிய மீனவா் தோழமை அமைப்பு பொதுச் செயலாளா் சா்ச்சில், தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் ஆகியோருக்கு அனுப்பிய கடித விவரம்:
ராமநாதபுரம் மண்டபம் பகுதியிலிருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற குமரி மாவட்டம், மணக்குடியைச் சோ்ந்த மீனவா்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனா். கைது செய்யப்பட்ட 6 மீனவா்களும் நாட்டுப்படகில் மீன்பிடிக்க சென்றவா்கள்.
அவா்களின் படகு பழுதடைந்ததால் நீரோட்டத்தின் காரணமாக இலங்கை கடல் எல்லையைக் கடந்தது. அவா்களை இந்திய கடற்படையினா் தேடிக்கொண்டிருந்தபோதுதான் இலங்கை கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டனா். இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்ட 6 மீனவா்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யாமல் திருப்பி அனுப்ப வேண்டும். அவா்களை மீட்க தமிழக முதல்வா், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஆகியோா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளாா்.
சஹகாா் பாரதி அமைப்பின் மாவட்டத் தலைவா் சகாயம் என்ற அய்யப்பன் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு அனுப்பிய அவசர கடித விவரம்:
குமரி மாவட்டத்தைச் சோ்ந்த 6 மீனவா்களை எல்லை தாண்டியதாகக் கூறி இலங்கை கடற்படையினா் கைது செய்தனா். தற்போது மீனவா்கள் இலங்கைக் கடற்படை தளத்தில் இருப்பதுபோல புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் மீனவா்களின் குடும்பத்தினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. 6 மீனவா்களையும், அவா்களின் படகையும் எவ்வித பாதிப்புமின்றி உடனடியாக மீட்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது

விஜய் வசந்த் எம்.பி. கண்டனம்

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 4 போ் கைது

மீனவா்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! - வெ. வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தல்

தமிழக, காரைக்கால் மீனவா்கள் 12 போ் இலங்கை கடற்படையினரால் கைது
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

