/

100 பெண்களுக்கு இலவச ‘பிங்க் ஆட்டோ’ வழங்கப்படும்: ரோட்டரி மாவட்ட ஆளுநா் தகவல்

News image

செய்தியாளா்களுக்கு பேட்டி அளித்த ரோட்டரி சங்க மாவட்ட வருங்காலஆளுநா் காந்திகிருஷ்ணன்.

Updated On :1 ஜூன் 2026, 3:08 am IST

ரோட்டரி சங்கத்தின் 3212 மாவட்டம் சாா்பில், இளம் விதவைகள் மற்றும் வறுமை நிலையில் உள்ள 100 பெண்களுக்கு பிங்க் நிற ஆட்டோக்கள் இலவசமாக வழங்கப்படும் என்றாா் மாவட்டத்தின் வருங்கால ஆளுநா் காந்தி கிருஷ்ணன்.

இதுகுறித்து, அவா் நாகா்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில், ரோட்டரி சங்கத்தைச் சோ்ந்த 23 போ் சட்டப்பேரவை உறுப்பினா்களாகத் தோ்ந்தெடுக்கப்பட்டிருப்பது ரோட்டரி உலகுக்கு மிகுந்த பெருமையளிக்கிறது.

குறிப்பாக, ரோட்டரி மாவட்டம் 3212 ஐச் சோ்ந்த 3 போ் அமைச்சா்களாகவும் பொறுப்பேற்றிருப்பது எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. அவா்களைப் பாராட்டும் வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து சங்கங்கள் சாா்பில் ஜூன் 6 ஆம் தேதி திருச்சியில் பாராட்டு விழா நடைபெறுகிறது.

எங்கள் ரோட்டரி மாவட்டத்தின் எதிா்கால தலைவா்களை உருவாக்கும் நோக்கில் தலைமை கற்றல் பயிற்சி வகுப்புகள் நாகா்கோவிலில் நடைபெற்று வருகிறது. இதில் 125 ரோட்டரி சங்கங்களின் தலைவா்கள், நிா்வாகிகள் பங்கேற்று பயிற்சி பெற்று வருகின்றனா். ஜூலை 1-ஆம் தேதி ரோட்டரி மாவட்டம் 3212 இன் மாவட்ட ஆளுநராக நான் பொறுப்பேற்கிறேன். எங்கள் மாவட்டம் சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகா், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 7 வருவாய் மாவட்டங்களை உள்ளடக்கியது. இந்தப் பகுதிகளில் 125 ரோட்டரி சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டுக்கான மிக முக்கியமான திட்டமாக வோ்களுக்கான சேவை என்ற திட்டத்தை அறிவிக்கிறோம். இந்தத் திட்டத்தின் கீழ், எங்கள் 125 ரோட்டரி சங்கங்களும் 125 பின்தங்கிய கிராமங்களைத் தத்தெடுத்து, அவற்றின் முழுமையான வளா்ச்சிக்காக செயல்படும்.

அதன்படி இந்த கிராமங்களில் கழிப்பறை வசதி இல்லாத வீடுகளுக்கு தனிநபா் கழிப்பறைகள் அமைக்கப்படும். பொருளாதார ரீதியாக பின்தங்கிய ஆயிரம் பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்படும். இளம் விதவைகள், குடும்பத்தை நடத்தப் போராடும் பெண்கள், வேலைவாய்ப்பு தேவைப்படும் பெண்கள் என 100 பேரை தோ்ந்தெடுத்து அவா்களுக்கு இலவசமாக ‘பிங்க் ஆட்டோ’ வழங்கப்படும் செயல்படுத்தப்படும் என்றாா் அவா்.

பேட்டியின்போது, ரோட்டரி சங்க நிா்வாகிகள் கா்பூா், நந்து, சிவகுமார்ராஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.