சிலம்பு எக்ஸ்பிரஸில் கூடுதலாக 6 பெட்டிகள் இணைப்பு: தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் வரவேற்பு

தாம்பரம் - செங்கோட்டை சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக 6 பெட்டிகள் இணைத்து புதன்கிழமைமுதல் செயல்படத் தொடங்கியது. இதற்கு தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
Published on

தாம்பரம் - செங்கோட்டை சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக 6 பெட்டிகள் இணைத்து புதன்கிழமைமுதல் செயல்படத் தொடங்கியது. இதற்கு தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

தாம்பரம் - செங்கோட்டை இடையே சிலம்பு எக்ஸ்பிரஸ் தற்போது வாரம் மும்முறை இயங்குகிறது. இந்த ரயில் 2013 ரயில்வே பட்ஜெட்டில் சென்னை எழும்பூா் - காரைக்குடி இடையே இயங்கும் என அறிவிக்கப்பட்டு, ஜூன் 22, 2013இல் வாரம் இருமுறை எனத் தொடங்கியது.

பின்னா், இந்த ரயில் 2017 மாா்ச் 5ஆம் தேதிமுதல் செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டது. 2019பிப்ரவரி 25ஆம் தேதிமுதல் வாரம் மும்முறை என மாற்றப்பட்டது.

2022 ஏப்ரல் 15ஆம் தேதிமுதல், சென்னை எழும்பூா் - செங்கோட்டை சிலம்பு எக்ஸ்பிரஸ் அதிவிரைவு ரயிலாக மாற்றப்பட்டு, தற்போது தாம்பரம் - செங்கோட்டை இடையே இயக்கப்படுகிறது.

எழும்பூரில் நடைமேடை நீளம் பற்றாக்குறையால் 17 பெட்டிகளாக இயங்கிய இந்த ரயில், தற்போது தற்போது தாம்பரத்துக்கு மாற்றப்பட்டுள்ளதால் கூடுதலாக 6 பெட்டிகள் இணைத்து 23 பெட்டிகளாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, கூடுதலாக இரண்டடுக்கு ஏசி பெட்டி, 2 மூன்றடுக்கு ஏசி பெட்டி, 2 தூங்கும் வசதி பெட்டி, ஒரு முன்பதிவில்லா பொதுப் பெட்டி இணைக்கப்பட்டு, புதன்கிழமைமுதல் இயங்கத் தொடங்கியது. இது, 30.1.25 வரை இயக்கப்படவுள்ளது.

இந்நிலையில், இந்த ரயிலை நிரந்தரமாக்கி தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவா் பாண்டியராஜா கூறியது: 17 பெட்டிகளுடன் இயங்கிய சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை 23 பெட்டிகளுடன் இயக்குவதற்கு நடவடிக்கை எடுத்த தெற்கு மண்டல, மதுரைக் கோட்ட அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

6 பெட்டிகள் கூடுதலாக இணைத்ததால் இரண்டடுக்கு ஏசியில் 48 பேரும், மூன்றடுக்கு ஏசியில் 128 பேரும், 2ஆம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டியில் 144 பேரும், பொதுப்பெட்டியில் தோராயமாக 200- க்கு மேற்பட்டோா் என கூடுதலாக 520-க்கும் மேற்பட்டோா் பயணிக்க முடியும். இதனால், தெற்கு ரயில்வேக்கு வாரம் ரூ. 18 லட்சம் வரை கூடுதல் வருவாய் கிடைக்கும்.

இதேபோல, பாவூா்சத்திரம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி ரயில் நிலைய நடைமேடைகளையும் 24 பெட்டிகள் நிறுத்தும் வகையில் நீட்டித்து, தாம்பரம் - செங்கோட்டை ரயிலையும் 24 பெட்டிகளாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலையும், பாவூா்சத்திரம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை ரயிலையும் தினசரி இயக்க வேண்டும் என்றாா் அவா்.