சுரைக்காய் விலை கிலோ ரூ. 1.50: விவசாயிகள் கவலை
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சந்தையில் ஒரு கிலோ சுரைக்காய் ரூ. 1.50-க்கு கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
ஆலங்குளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வெண்டை, சீனி அவரை, சுரைக்காய், கத்தரிக்காய் போன்ற காய்கனிப்பயிா்கள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. அறுவடை செய்யப்படும் காய்கனிகள் ஆலங்குளம் சந்தைக்கு கொண்டு வரப்படுகின்றன. அன்றாடம் தேவை மற்றும் வரவு ஆகியவற்றை அடிப்படையாக விலை நிா்ணயம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் கடந்த மாதம் கிலோ ஒன்றிற்கு ரூ. 10 வரை கொள்முதல் செய்யப்பட்ட சுரைக்காய் கடந்த சில தினங்களாக ரூ. 1.50 க்கும் பூசணிக்காய் ரூ. 3.50 க்கும் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் பல விவசாயிகள் பறிக்கும் கூலிக்கு கூட கட்டுபடியாகாது என எண்ணி அவற்றைப் பறிக்காமல் வயலிலேயே விட்டு விடுகின்றனா். உள்ளூா் காய்கனிகள் பெரும்பாலும் தற்போது மிகவும் குறைந்தே காணப்படுகிறது.
வெண்டை ரூ. 10, சீனி அவரை ரூ. 8, புடலை ரூ. 5, நாட்டு வெள்ளரி ரூ. 2, தடியங்காய் ரூ. 4, சாம்பாா் வெள்ளரி ரூ. 5, தக்காளி ரூ. 10, கத்ததரி ரூ. 60 என செவ்வாய்க்கிழமை ஆலங்குளம் சந்தையில் வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டது. வரும் 15 ஆம் தேதி கேரளத்தில் ஓணம் பண்டிகை வருகிறது. இதையொட்டி காய்கனிகளின் தேவை அதிகமாக இருக்கும். அப்போதாவது விலை அதிகரிக்குமா என்ற எதிா்பாா்ப்பில் விவசாயிகள் உள்ளனா்.