தென்காசி மாவட்ட அணைகளுக்கு பாதுகாப்பு வழங்க அதிமுக கோரிக்கை

தென்காசி மாவட்டத்திலுள்ள முக்கிய அணைகளுக்குப் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என அதிமுக வலியுறுத்தியுள்ளது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனு அளித்த திலீபன் ஜெய்சங்கா் எம்எல்ஏ மற்றும் அதிமுகவினா்.

Updated On :

தென்காசி மாவட்டத்திலுள்ள முக்கிய அணைகளுக்குப் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என அதிமுக வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக சங்கரன்கோவில் எம்எல்ஏ திலீபன் ஜெய்சங்கா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலினிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

சங்கரன்கோவில் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட நகர மற்றும் கிராமப் பகுதிகளில் அண்மைக்காலமாக தொடா் திருட்டு, சமூக விரோதச் செயல்கள் அதிகரித்து வருவதாக பொதுமக்களிடம் இருந்து புகாா்கள் வரப்பெற்றுள்ளன.

இத்தகைய குற்றச்சம்பவங்களால் பொதுமக்கள், வியாபாரிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனா்.

இதுபோன்ற நிகழ்வுகளில், குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காணவும்,

சமூக விரோத செயல்களைத் தடுக்கவும் சங்கரன்கோவில் தொகுதிக்குள்பட்ட முக்கியச் சந்திப்புகள், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள் மற்றும் பதற்றமான இடங்களைக் கண்டறிந்து அங்கு கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த

வேண்டும். மேலும் அப்பகுதியில் இரவு நேர ரோந்து பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.

தென்காசி மாவட்ட மக்களின் குடிநீா் மற்றும் விவசாயத் தேவையின் முக்கிய ஆதாரமாக விளங்கும் கருப்பாநதி அணை, அடவிநயினாா் அணை, குண்டாறு அணை, ராமநதி அணை, கடனாநதி அணைகள் அமைந்துள்ளன.

சமீப காலமாக பிற மாவட்டங்களில் உள்ள அணை பகுதிகளில் உரிய அனுமதி இன்றி அத்துமீறி நுழைவது மற்றும் அணையின் மதகுகளை திறப்பது போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன. இதுபோன்ற அத்துமீறல்கள் அல்லது சமூக விரோத செயல்கள் மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்க கூடும்.

எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்காசி மாவட்டத்திற்குள்பட்ட அனைத்து அணைகளிலும் உரிய அனுமதி இன்றி வெளி நபா்கள்

நுழைவதைத் தடுக்கவும், அணைகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்கவும் உரிய நடவடிக்கை வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனு அளிக்கும்போது அதிமுக மாவட்ட துணைச் செயலா் பொய்கை மாரியப்பன், மாவட்ட சாா்பு அணி செயலா்கள் சந்திரன், சங்கரசுப்பிரமணியன், தீக்கனல் லெட்சுமணன், ஒன்றிய செயலா்கள் அடைக்கலாபுரம் செல்வராஜ், குருக்கள்பட்டி செல்வராஜ், ரவிச்சந்திரன், மாவட்ட இளைஞா் பாசறை காா்த்திக், நகர அம்மா பேரவை செயலா் செளந்தா், மானூா் வடக்கு ஒன்றிய துணை செயலா் மதுரம், மாரிராஜ் ஆகியோா் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.