தென்காசி மாவட்டம்: ஆக. 17இல் கருத்துக் கேட்பு கூட்டம்

தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்குவது தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம்

தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்குவது தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம் திருநெல்வேலி மற்றும் குற்றாலத்தில் வரும் 17ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி பெரிய மாவட்டமாக இருப்பதால், அதைப் பிரித்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்படும் என கடந்த 18ஆம் தேதி சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
இதையடுத்து, புதிய மாவட்டத்தை உருவாக்குவதற்காக வருவாய் நிர்வாக ஆணையர் கொ.சத்தியகோபால் முன்னிலையில் கருத்துக் கேட்பு கூட்டம் திருநெல்வேலி மற்றும் குற்றாலத்தில் வரும் 17ஆம் தேதி நடைபெறுகிறது. 
17ஆம் தேதி காலை 10 மணி முதல் 11 மணி வரை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களின் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து, பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை திருநெல்வேலி மற்றும் சேரன்மகாதேவி வருவாய் கோட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள், தன்னார்வலர்கள், பொது நல அமைப்புகள் மற்றும் பிற அமைப்பினரிடம் கருத்துக் கேட்கும் கூட்டம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
அன்றைய தினம் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி கலையரங்கில் தென்காசி வருவாய் கோட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள், தன்னார்வலர்கள், பொது நல அமைப்புகள் மற்றும் பிற அமைப்பினரிடம் கருத்துக் கேட்கும் கூட்டம் நடைபெறுகிறது.  தென்காசி மாவட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்க விரும்புபவர்கள் 17ஆம் தேதி நேரில் ஆஜராகி எழுத்து மூலமாகவோ அல்லது நேரடியாகவோ தங்களுடைய கருத்துகளைத் தெரிவிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com