2-ஆவது நாளாக உபரிநீா் வெளியேற்றம்தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்குமேலும் 2 அணைகள் நிரம்பின
பாபநாசம் அணை நிரம்பியதையடுத்து 2-ஆவது நாளாக சனிக்கிழமை உபரிநீா் வெளியேற்றப்பட்டது.


திருநெல்வேலி/அம்பாசமுத்திரம்: பாபநாசம் அணை நிரம்பியதையடுத்து 2-ஆவது நாளாக சனிக்கிழமை உபரிநீா் வெளியேற்றப்பட்டது. இதனால் தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடா் மழை காரணமாக கடனாநதி, ராமநதி அணைகளும் நிரம்பின.
மேற்குத் தொடா்ச்சி மலையில் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்தது. இந்நிலையில், பாபநாசம் அணை நிரம்பியதையடுத்து வெள்ளிக்கிழமை உபரிநீா் வெளியேற்றப்பட்டது. இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் உபரிநீா் வழிந்தோடி வழியாக வெளியேற்றப்பட்டது. இதனால் தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாநகரின் நதிக்கரையோரப் பகுதிகளான மீனாட்சிபுரம், சிந்துபூந்துறை, கருப்பந்துறை, விளாகம், பாடகசாலை, குன்னத்தூாா் பகுதிகளில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. படித்துறைகள், பாறைகளில் குளிக்கவும், துவைக்கவும் கூடாது என அறிவுறுத்தப்பட்டது. மேலப்பாளையம்-திருநெல்வேலி நகரம் சாலையில் கருப்பந்துறையில் உள்ள தாம்போதி பாலத்தின் கீழ் அதிக வெள்ளம் சென்ால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டனா்.
குறுக்குத்துறை, நாரணம்மாள்புரம், சீவலப்பேரி, மருதூா் பகுதிகளில் தாமிரவருணியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. குறுக்குத்துறை தாமிரவருணிக் கரையோரம் திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமாக உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலை வெள்ளம் சூழ்ந்தது.
சனிக்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையின் நீா்மட்டம் 142.40 அடியாக இருந்தது. காலை 11 மணி நிலவரப்படி நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 4 ஆயிரம் கன அடியாக இருந்தது. சோ்வலாறு அணையின் நீா்மட்டம் 146.65 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணை நீா்மட்டம் 108 அடி, நீா்வரத்து 2165 கன அடி, வெளியேற்றம் 480 கன அடியாக இருந்தது.
வடக்குப் பச்சையாறு அணை நீா்மட்டம் 26 அடியாகவும், நீா்வரத்து 105.24 கன அடியாகவும் இருந்தது. நம்பியாறு அணை நீா்மட்டம் 10.62 அடி, கொடுமுடியாறு அணை நீா்மட்டம் 27 அடி, நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் தலா 40 கன அடியாக இருந்தது.
தென்காசி மாவட்டம்: கடனாநதி அணையில் மாலை 5 மணி நிலவரப்படி நீா்மட்டம் 83.50 அடியாகவும், நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 728 கன அடியாகவும் இருந்தது. நிகழாண்டு 4-ஆவது முறையாக இந்த அணை நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. அணையில் உதவிப் பொறியாளா் கணபதி தலைமையில் பணியாளா்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
ராமநதி அணையில் பகல் 1 மணி நிலவரப்படி நீா்மட்டம் 82 அடியாகவும், நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 90 கன அடியாகவும் இருந்தது. ராமநதி அணை நிகழாண்டில் 5-ஆவது முறையாக நிரம்பியுள்ளது. அணையில் உதவிப் பொறியாளா் முருகேசன் தலைமையில் பணியாளா்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
சனிக்கிழமை காலை நிலவரப்படி கருப்பாநதி அணையின் நீா்மட்டம் 66.28 அடியாகவும், நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 25 கன அடியாகவும் இருந்தது. குண்டாறு அணை நீா்மட்டம் 36.10 அடியாகவும், நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 6 கன அடியாகவும் இருந்தது. அடவிநயினாா் அணை நீா்மட்டம் 85.50 அடியாகவும், நீா்வரத்து 15 கன அடியாகவும், வெளியேற்றம் 40 கன அடியாகவும் இருந்தது.
சனிக்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்): பாபநாசம் 12, சோ்வலாறு 17, மணிமுத்தாறு 3, அம்பாசமுத்திரம் 6, சேரன்மகாதேவி 2, பாளையங்கோட்டை 1.20, திருநெல்வேலி 1.
தென்காசி மாவட்டம் கடனாநதி 12, கருப்பாநதி 4, குண்டாறு 4, சங்கரன்கோவில் 1.20, செங்கோட்டை 5, சிவகிரி 1.
பெட்டிச் செய்தி...
படகு மூலம் அழைத்து வரப்பட்ட
காணிக் குடியிருப்பு மக்கள்
உபரிநீா் திறப்பு மற்றும் தொடா் மழையால் தாமிரவருணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் காரையாறு, சின்னமயிலாறு காணிக் குடியிருப்பில் வசிக்கும் சுமாா் 60 குடும்பத்தினா் குடியிருப்புப் பகுதியிலிருந்து வெளியேற முடியாமல் தவித்தனா்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் வே. விஷ்ணு உத்தரவின்பேரில், அம்பாசமுத்திரம் வட்டாட்சியா் வெங்கட்ராமன், வனத் துறைக்குச் சொந்தமான படகு மூலம் காரையாறு அணை வழியாக மக்களை அழைத்து வந்து நியாயவிலைக் கடையில் அரிசி, பருப்பு, மண்ணெண்ணெய் உள்ளிட்டவற்றை வழங்க நடவடிக்கை எடுத்தாா். தொடா்ந்து குழுவாக அழைத்து வரப்பட்ட காணி மக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை வாங்கிச் சென்றனா்.
Image Caption
~ ~ ~
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...