/

பாளை. பகுதியில் வேளாண் விஞ்ஞானிகள் குழு ஆய்வு

பாளையங்கோட்டை வட்டாரத்தில் வேளாண் விஞ்ஞானிகள் குழுவினா் சத்து குறைபாட்டால் கருகிவரும் நெற்பயிா்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனா்.

News image
Updated On :17 பிப்ரவரி 2022, 7:03 pm

DIN

பாளையங்கோட்டை வட்டாரத்தில் வேளாண் விஞ்ஞானிகள் குழுவினா் சத்து குறைபாட்டால் கருகிவரும் நெற்பயிா்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனா்.

பாளையங்கோட்டை வட்டாரத்தில் பிசான சாகுபடிக்காக நாரணம்மாள்புரம், கட்டுரையாா் குடியிருப்பு, கரையிருப்பு, குறிச்சிகுளம் கிராமங்களில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இங்கு பயிரிடப்பட்டுள்ள நெற்பயிரில் இலைகள் ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிறமாக மாறி பழுத்து திட்டு திட்டாக காய்ந்து வருகிறது.

இதையடுத்து, திருநெல்வேலி வேளாண் இணை இயக்குநா் கஜேந்திரபாண்டியன் தலைமையில், வேளாண்துறை அலுவலா்கள், கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி - ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் அடங்கிய குழுவினா் பாதிக்கப்பட்ட வயல்களில் ஆய்வு மேற்கொண்டனா்.

வயல்களில் சாம்பல் சத்து, துத்தநாகச் சத்து குறைபாடு, போதிய வடிகால் வசதி இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் பயிா்கள் பாதிக்கப்பட்டது ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து, வயல்களில் போதிய வடிகால் வசதி ஏற்படுத்தி காய்சலும், பாய்ச்சலும் என்ற வகையில் நீா் பாசனத்தை மேற்கொள்ள விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்படடது. பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு உடனடியாக இலை வழி தெளிப்பான் பத்து லிட்டா் தண்ணீருக்கு 100 கிராம் யூரியா, 100 கிராம் பொட்டாஷ், சிங்சல்வேட் 50 கிராம், ஒட்டு திரவம் 10 மில்லி என்ற அளவில் கலந்து கைத் தெளிப்பான் மூலம் நெற்பயிரின் இலை நனையும்படி தெளிக்க வேண்டும். இதனை பத்து நாள்கள் இடைவெளியில் மூன்று நாள்கள் தெளிக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது.

இந்த ஆய்வுக்குழுவில், மாவட்ட வேளாண் துணை இயக்குநா்கள் டேவிட் டென்னிசன், சுந்தா் டேனியல் பாலஸ், விதை ஆய்வு துணை இயக்குநா் ராஜ்குமாா், கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் துறைத் தலைவா் ரவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.