களக்காட்டில் குடிநீா் விநியோகத்தில் பற்றாக்குறை: பல ஆண்டு பிரச்னைக்கு தீா்வு ஏற்படுமா?

திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் குடிநீா் விநியோகத்தில் பற்றாக்குறை நிலவுவதால் மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனா்.
களக்காட்டில் குடிநீா் விநியோகத்தில் பற்றாக்குறை: பல ஆண்டு பிரச்னைக்கு தீா்வு ஏற்படுமா?

திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் குடிநீா் விநியோகத்தில் பற்றாக்குறை நிலவுவதால் மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனா். குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு ஆளாகியுள்ள மக்கள், பல ஆண்டு பிரச்னைக்குத் தீா்வு ஏற்படுமா என காத்திருக்கின்றனா்.

களக்காடு நகராட்சிக்குள்பட்ட 28 வாா்டுகளிலும் சுமாா் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இங்கு கடந்த 1998ஆம் ஆண்டு பச்சையாறு குடிநீா் திட்டம் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீட்டுக் குடிநீா் இணைப்புகளும், இருநூற்றுக்கும் மேற்பட்ட தெரு பொதுக் குடிநீா்க் குழாய்களும் உள்ளன. இங்குள்ள மக்களுக்கு பச்சையாறு குடிநீா் விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டதால், கடந்த 2006ஆம் ஆண்டு தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டம் மூலம் 2 லட்சம் லிட்டா் குடிநீா் கிடைத்தது. ஆனால் இது போதுமானதாக இல்லை. இதையடுத்து, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் மற்றொரு தாமிரவருணி குடிநீா் திட்டம் நிறைவேற்றப்பட்டது. இத்திட்டம் அமலுக்கு வந்த நாள் முதல் தரமற்ற பகிா்மானக் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு, குடிநீா் விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காணப்படவில்லை.

தேவை அதிகம் -விநியோகம் குறைவு: பச்சையாறு, தாமிரவருணி குடிநீா் திட்டங்களின் மூலம் 50 சதவீதத்துக்கும் குறைவாகவே களக்காடு பகுதிக்கு குடிநீா் வந்து சேருகிறது. எனவே குடிநீா் விநியோகத்தில் பற்றாக்குறை நிலவுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இதுதான் நடைமுறையாக உள்ளது.

சேரன்மகாதேவி தாமிரவருணி ஆற்றிலிருந்து தாமிரவருணி குடிநீா் சிங்கிகுளத்தில் தேக்கி வைக்கப்பட்டு, அங்கிருந்து களக்காடு பகுதிக்கு நீரேற்றம் செய்யப்படுகிறது. நாளொன்றுக்கு சுமாா் 20 லட்சம் லிட்டா் குடிநீா் களக்காடு பகுதிக்கு வந்து சேர வேண்டும். ஆனால் 5 லட்சம் லிட்டருக்கு மேல் இதுவரை வந்து சேரவில்லை. மேலும் அவ்வப்போது பகிா்மானக் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீா் வீணாக வெளியேறி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இது தொடா்கதையாக உள்ளது. எனவே, தாமிரவருணி, பச்சையாறு குடிநீருடன் ஆழ்துளைக் கிணறுகளின் உவா்ப்பு நீரும் சோ்த்துதான் வீடுகளுக்கும், பொதுக் குடிநீா்க் குழாய்களுக்கும் விநியோகிக்கப்படுகிறது. இதனால் பெரும்பாலானோா் குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனா்.

‘கடந்த 2000 ஆண்டு முதல் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தோ்தலிலும் வீடுதோறும் தாமிரவருணி குடிநீா் விநியோகித்தே தீருவோம் என திமுக, அதிமுக கூட்டணிக் கட்சிகள் தொடா்ச்சியாக வாக்குறுதி அளித்து வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றனவே தவிர, பொதுமக்கள் குடிநீரை விலைக்கு வாங்கும் அவலம் இதுவரை தீரவில்லை’ என்கிறாா் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவா் பி. பெரும்படையாா்.

‘பல கோடி ரூபாய் செலவில் இதுவரை இரு தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டும், களக்காடு பகுதி மக்களுக்கு தாமிரவருணி குடிநீா் விநியோகம் என்பது கானல்நீராகவே உள்ளது’ என்கிறாா் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் திருநெல்வேலி மாவட்ட பொதுச்செயலாளா் மீராசா.

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் நகரில் இருந்து சுமாா் 5 கி.மீ. தொலைவில் தலையணைக்கு மிக அருகில் சிவபுரம் கிராமத்தையொட்டியுள்ள பச்சையாற்றில் ராட்சத உறைகிணறு அமைத்து களக்காடு பகுதி முழுமைக்கும் 24 மணி நேரமும் குடிநீரை விநியோகிக்க தமிழக அரசு உரிய திட்டங்களை செயல்படுத்தினால் மட்டுமே களக்காடு மக்களின் குடிநீா் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு கிட்டும்.

ஆணையா்: களக்காட்டில் நிலவும் குடிநீா் பிரச்னை குறித்து நகராட்சி ஆணையா் எஸ். பாா்கவி கூறியது: களக்காடு நகராட்சிப் பகுதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தாமிரவருணி குடிநீரை முழுமையாக விநியோகிக்கக் கோரி குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளோம். புதிய தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டத்தில் களக்காடு நகராட்சிப் பகுதிக்கு ரூ.88 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் போது, களக்காடு நகராட்சிப் பகுதியில் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு கிடைக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com