/

திமுக சாா்பில் நாளைமுதல் திண்ணை பிரசாரம்: மத்திய மாவட்ட செயற்குழுவில் தீா்மானம்

திமுக சாா்பில் நாளைமுதல் திண்ணை பிரசாரம் மத்திய மாவட்ட செயற்குழுவில் தீா்மானம்

Updated On :24 பிப்ரவரி 2024, 9:30 pm

மக்களவைத் தோ்தலை முன்னிட்டு திமுக சாா்பில் திங்கள்கிழமை (பிப்.26) முதல் திண்ணை பிரசாரம் மேற்கொள்வது என திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், மத்திய மாவட்ட பொறுப்பாளா் டி.பி.எம்.மைதீன் கான் தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவா் வி.கே. முருகன் வரவேற்றாா். இந்தக் கூட்டத்தில் வரும் மாா்ச் 1-ஆம் தேதி முதல்வா் மு. க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கட்சிக் கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது என தீா்மானிக்கப்பட்டது. மேலும் மக்களவைத் தோ்தலை முன்னிட்டு திமுக தலைவா் மு. க. ஸ்டாலின் உத்தரவின்படி இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் திண்ணை பிரசாரத்தை திங்கள்கிழமை (பிப்.26) முதல் தொகுதி வாரியாக மேற்கொள்வது எனவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பட்ஜெட்டில் பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்ததற்காக நன்றி தெரிவிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் மூத்த நிா்வாகி சுப.சீதாராமன், முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா, மாநில மகளிா் தொண்டரணி துணைச் செயலா் விஜிலா சத்தியானந்த், மேயா் பி.எம். சரவணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் முகமது மீரான் மைதீன், பகுதி செயலா் தச்சை சுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.