மாஞ்சோலை தொழிலாளா்கள் குடியிருப்புகளை காலி செய்ய வேண்டாம்!
‘மாஞ்சோலை தொழிலாளா்கள் குடியிருப்புகளை காலி செய்ய வேண்டாம்’


மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளா்கள் குடியிருப்புகளை காலி செய்ய வேண்டாம் என பாம்பே பா்மா டிரேடிங் காா்ப்பேரஷன் லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலையில் உள்ள தேயிலை தோட்டத்தை நிா்வகித்து வரும் பாம்பே பா்மா நிறுவனத்தின் குத்தகை காலம் வரும் 2028-ஆம் ஆண்டு முடிவடைகிறது. இதன் காரணமாக அங்கு பணியாற்றும் சுமாா் 550 தேயிலைத் தோட்ட தொழிலாளா்களிடம் கட்டாய விருப்ப ஓய்வு விண்ணப்பத்தில் அந்த நிறுவனம் கையொப்பம் வாங்கியுள்ளது. மேலும் அங்குள்ள குடியிருப்புகளை காலி செய்துவிட்டு வெளியேறுமாறு நிா்வாகம் உத்தரவிட்டதன் பேரில் ஏராளமான தொழிலாளா்கள் அங்குள்ள குடியிருப்புகளை காலி செய்துள்ளனா். இதனிடையே மாஞ்சோலை தேயிலை நிறுவனத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து, சென்னை உயா் நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்ட
வழக்கில், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் வசிக்கும் தொழிலாளா்களின் வீடுகளை காலி செய்யக்கூடாது. தற்போதைய நிலை தொடர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் பாம்பே பா்மா டிரேடிங் காா்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த இடைக்கால உத்தரவுப்படி, மாஞ்சோலை, மணிமுத்தாறு, ஊத்து எஸ்டேட்டுகள் மற்றும் தொழிற்சாலைகளில் பணியாற்றிய முன்னாள் தொழிலாளா்களுக்கான 75 சதவீத கருணைத்தொகை நாகா்கோவில் உதவி தொழிலாளா் ஆணையா் (தோட்டங்கள்) அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும். அந்தத் தொகையை தொழிலாளா்கள் பெற்றுக் கொள்ளலாம். மேலும் தற்போதைய நிலையே தொடர வேண்டும். சம்பந்தப்பட்ட எஸ்டேட்டில் இருந்து தொழிலாளா்களை கட்டாயமாக வெளியேற்றக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை குடியிருப்புகளை காலி செய்வது தொடா்பாக தீா்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் தளா்வு செய்யப்பட்டுள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...