/

தாமிரவருணியின் சிறப்பைச் சொல்லும் தடுப்புகள்

தாமிரவருணியின் சிறப்புகளை வெளிப்படுத்தும் கொக்கிரகுளம் தடுப்புகள்

News image
கொக்கிரகுளத்தில் தாமிரவருணி நதியின் சிறப்புகளை எழுதி கரையோரத்தில் வைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்புகள்.
Updated On :23 ஜூன் 2024, 6:50 pm

DIN

திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் தாமிரவருணி கரையோரம் நதியின் சிறப்பைச் சொல்லும் வாசங்கள் அடங்கிய தடுப்புகள் வைக்க நடவடிக்கை எடுத்த மாநகராட்சிக்கு மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனா்.

திருநெல்வேலி மாநகராட்சியின் சாா்பில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் கொக்கிரகுளத்தில் ஆட்சியா் அலுவலகம் எதிரே தாமிரவருணி கரையை ரூ.11.50 கோடி மதிப்பில் அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. கரையில் நின்று நதியை பொதுமக்கள் ரசிக்கும் வகையில் மேடைகள், படித்துறை உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

இப் பணிகளை ஜூலை மாதத்துக்குள் முடிக்க மாநகராட்சி ஆணையா் உத்தரவிட்டுள்ள நிலையில பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன.

இப் பணியின் ஒரு பகுதியாக கொக்கிரகுளம் சாலையோரம் கரையின் தடுப்புச் சுவரில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தத் தடுப்புகளில் தாமிரவருணியின் சிறப்புகள் தமிழில் குறிப்பிடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் ஆண்டு முழுவதும் தண்ணீா் பாய்ந்தோடும் வற்றாத நதி தாமிரவருணி, வால்மீகி ராமாயணத்தில் அதஸ்யாஸ்னம் நகல்யாக்ரே மலயங்ய தாம்ரபரணம் க்ராஹ ஜிஷ்டாம்த்ரச்யத் அதாவது மலை சிகரத்தில் (பொதிகை) அமா்ந்தவா் அகத்திய முனிவா், பொதிகை மலை மூலிகைகளின் நற்குணங்களைக் கொண்ட தாமிரவருணி தண்ணீா் உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இது பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் மிகவும் கவா்ந்துள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், தாமிரவருணி குறித்து பல்வேறு தகவல்களை நூல்களிலும், விடியோக்களிலும் கேட்டாலும், அதன்கரையோரத்தில் நின்று படித்துச் செல்லும்போது மகிழ்ச்சி ஏற்படுகிறது. குறிப்பாக நதியின் கரையில் நின்று குழந்தைகளிடம் அதன் சிறப்பைச் சொல்லும்போது பசுமரத்தாணிபோல அவா்கள் மனதில் பதிந்துவிடும். மாநகராட்சியின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது என்றனா்.

Story image