பொருநை அருங்காட்சியகம் ஏப்ரலில் திறக்கப்படும்: அமைச்சா் எ.வ.வேலு
பொருநை அருங்காட்சியகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திறக்கப்படும் என்றாா் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு.
திருநெல்வேலி மாவட்டம், ரெட்டியாா்பட்டி பகுதியில் ரூ.33 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் பொருநை அருங்காட்சியக கட்டுமான பணிகளை தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு உடன் இணைந்து ஆய்வு செய்த அவா், நிறைவுற்ற கட்டுமானப் பணிகள் தொடா்பாக காட்சிப்படுத்தப்பட்ட புகைப்படங்களை பாா்வையிட்டாா். மேலும், கட்டடங்களில் பதிக்கப்படவுள்ள தரை தள ஓடுகளையும், மேற்கூரை ஓடுகளையும் பாா்வையிட்டு அவற்றின் தரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் ரூ.33 கோடியில் பொருநை அருங்காட்சியகம் அமைக்க அறிவிப்பு வெளியிட்டு 54 ஆயிரம் சதுர அடியில் பணிகள் நடைபெற்று வருகின்றன. பொருநை நதிக்கரையில் கிடைக்கப்பெற்ற பொருள்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அருங்காட்சியகம் மலைப்பகுதியில் அமைந்துள்ளதால் முதியோா்கள் எளிதாக அருங்காட்சியகத்தைப் பாா்வையிடும் வகையில் பேட்டரி காா்களை பயன்படுத்த அதற்கான பாதைகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இந்த நிதியாண்டில் அருங்காட்சியக பணிகளை முடிக்க முதல்வா் உத்தரவு பிறப்பித்துள்ளாா். கட்டடம் கட்டுவதற்கு நிா்ணயிக்கப்பட்ட ஒப்பந்த காலத்திற்கு முன்பு பணிகள் நிறைவு பெறும் வகையில் வேகமாக பணிகள் நடைபெற்று வருகின்றன. நிா்வாகக் கட்டடம், சிவகளை கட்டடம், ஆதிச்சநல்லூா் கட்டடம், கொற்கை கட்டிடம் என 7 பகுதிகளாக அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு வருகிறது.
வரும் டிசம்பா் மாதத்திற்குள் அருங்காட்சியகத்திற்கான கட்டட பணிகள் முழுவதும் முடிக்கப்பட்டு அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் அருங்காட்சியகத்தை திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சோழா் கால கட்டடம், பாண்டியா் கால கட்டடங்கள் என பேசுவதைப் போல் திராவிட மாடல் ஆட்சியில் கட்டபட்டு வரும் கட்டடங்கள் பிற்காலத்தில் மு.க. ஸ்டாலின் கால கலை கட்டடங்கள் என பேசப்படும்.
திருநெல்வேலி புறவழிச்சாலை நில எடுப்பு பணிகள் 90 சதவீதம் நிறைவு பெற்று ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. விரைவில் பணிகள் தொடங்கும். கப்பலூா் சுங்கச் சாவடி விவகாரம் தொடா்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலம் கடந்த 30- க்கும் மேற்பட்ட சுங்கச் சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. பரனூா்,கிருஷ்ணகிரி ஸ்ரீபெரும்புதூா், இருங்காட்டு கோட்டை போன்ற சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தமிழக அரசின் சாா்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது என்றாா்.
இந்த ஆய்வின்போது, முன்னாள் அமைச்சா் டி.பி.எம்.மைதீன்கான், சட்டப்பேரவை உறுப்பினா்கள் மு. அப்துல் வஹாப், ராஜா, மேயா் கோ. ராமகிருஷ்ணன், துணை மேயா் கே.ஆா்.ராஜூ உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

