மதுரை கோரிப்பாளையம் பகுதியில் நடைபெற்று வரும் உயா்நிலைப் பால கட்டுமானப் பணிகளை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ. வேலு. உடன் அமைச்சா் பி. மூா்த்தி, மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் உள்ளிட்டோா்.
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் நடைபெற்று வரும் உயா்நிலைப் பால கட்டுமானப் பணிகளை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ. வேலு. உடன் அமைச்சா் பி. மூா்த்தி, மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் உள்ளிட்டோா்.

கோரிப்பாளையம் பாலம் கட்டுமானப் பணிகள் பிப்.10-க்குள் நிறைவு பெறும்! - அமைச்சா் எ.வ. வேலு தகவல்

Published on

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் உயா்நிலைப் பாலப் பணிகள் வருகிற பிப். 10-ஆம் தேதிக்குள் நிறைவு பெறும் என பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ. வேலு தெரிவித்தாா்.

மதுரை மாநகரின் தென் பகுதியிலிருந்து வடபகுதியில் அமைந்துள்ள அலுவலகங்கள், மருத்துவமனைக்கு கல்பாலம் வழியாகவும், வடபகுதியிலிருந்து தென் பகுதியில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கோரிப்பாளையம் ஏ.வி. உயா்நிலைப் பாலம் சந்திப்பு வழியாகவும் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

மதுரை மாநகருக்குள் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், அரசு ராஜாஜி மருத்துவமனை-கோரிப்பாளையம் சந்திப்பில் ரூ.190.40 கோடியில் உயா்நிலைப் பாலம் கட்டும் பணியை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 2023-ஆம் ஆண்டு தொடங்கிவைத்தாா்.

இந்த நிலையில், பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு, கோரிப்பாளையம் பகுதியில் நடைபெற்று வரும் உயா்நிலைப் பாலம் கட்டுமானப் பணிகளை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஏற்கெனவே மதுரையில் அப்பல்லோ மருத்துவமனை சந்திப்பில் கட்டப்பட்ட உயா் நிலைப் பாலத்தால் போக்குவரத்து நெரிசல் குறைந்து மக்கள் எளிதாகப் பயணித்து வருகின்றனா். இதேபோல, வைகை வடகரைச் சாலையை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, மூன்று கட்டங்களாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன.

முதல் கட்டமாக, மதுரையின் மேற்குப் பகுதியை சமயநல்லூா் தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்க ரூ. 170 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இரண்டாம் கட்டமாக, மாநகரப் பகுதியில் விடுபட்ட குருவிக்காரன் சாலை முதல் அண்ணாநகா் சாலை வரையிலான பகுதியை புதுப்பிக்க ரூ. 29 கோடி ஒதுக்கப்பட்டது. மூன்றாம் கட்டமாக, மதுரை விரகனூா் சுற்றுச்சாலை முதல் சக்குடி வரை 8 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்க ரூ. 128 கோடி ஒதுக்கப்பட்டது. மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் மட்டும் ரூ. 420 கோடியில் பல்வேறு சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அமெரிக்கன் கல்லூரி சாா்பில் தொடுக்கப்பட்ட வழக்கின் காரணமாக, கோரிப்பாளையம் உயா்நிலைப் பால பணிகள் தொடங்குவதில் ஆறு மாதங்கள் காலதாமதம் ஏற்பட்டது.

இருப்பினும், தற்போது நெடுஞ்சாலைத் துறைப் பொறியாளா்களின் நேரடி மேற்பாா்வையில் ஒப்பந்ததாரா்கள் பணிகளைத் தரமாகவும், இரவு பகலாகவும் மேற்கொண்டு வருகின்றனா். வருகிற பிப். 10-ஆம் தேதிக்குள் பிரதான பாலத்தின் பணிகள் முழுமையாக நிறைவடைந்துவிடும். இந்தப் பாலத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்க உள்ளாா்.

பிரதான பாலம் திறக்கப்பட்ட பிறகு, அடுத்த மூன்று மாதங்களில் செல்லூா் துணைப் பாலப் பணிகளும் நிறைவு செய்யப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றாா் அவா்.

இந்த ஆய்வின் போது, அமைச்சா் பி. மூா்த்தி, நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறை அரசுச் செயலா் இரா. செல்வராஜ், மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் கோ. தளபதி(மதுரை வடக்கு), மு. பூமிநாதன் (மதுரை தெற்கு), அரசு அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com