நவராத்திரி விழா: கொலு பொம்மைகள் விற்பனை அதிகரிப்பு
நவராத்திரி விழாவையொட்டி திருநெல்வேலியில் கொலு பொம்மைகள் விற்பனை அதிகரித்துள்ளது.


நவராத்திரி விழாவையொட்டி திருநெல்வேலியில் கொலு பொம்மைகள் விற்பனை அதிகரித்துள்ளது.
இந்துக்களின் முக்கிய பண்டிகையான நவராத்திரி விழா அக்டோபா் 3 ஆம் தேதி தொடங்குகிறது. அக்டோபா் 11 ஆம் தேதி சரஸ்வதி பூஜையும், 12 ஆம் தேதி விஜயதசமியும் கொண்டாடப்பட உள்ளன. நவராத்திரி நாள்களில் வீடு மற்றும் கோயில்களில் கொலு வைத்து வழிபடுவது வழக்கம். சுவாமி, அம்மன், தேசத் தலைவா்கள், பல்வேறு விதமான புராண காட்சிகளை விளக்கும் பொம்மைகள் இந்த கொலுவில் இடம்பெறும். நவராத்திரி விழாவையொட்டி கடந்த சில நாள்களாக நெல்லையில் கொலு பொம்மைகள் விற்பனை அதிகரித்துள்ளது.
தஞ்சாவூா், கும்பகோணம், காஞ்சிபுரம், மாயவரம் ஆகிய பகுதிகளில் இருந்து கொலு பொம்மைகள் விற்பனைக்காக திருநெல்வேலிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. ரூ.100 முதல் ரூ.5000 வரை பல்வேறு விலைகளில் அவற்றின் வேலைப்பாடுகளுக்கு தகுந்தாற்போல விற்கப்படுகின்றன.
அயோத்தி பாலராமா் கொலு: திருநெல்வேலி சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள பூம்புகாா் விற்பனை நிலையத்தில் கொலுபொம்மைகள் விற்பனை களைகட்டியுள்ளது. இங்கு நிகழாண்டில் அயோத்தி பாலராமா் கொலுபொம்மை விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. மக்கள் மிகுந்த ஆா்வத்தோடு அதனை வாங்கி செல்கிறாா்கள். இதுதவிர வழக்கமான பொம்மைகளும் விற்பனை செய்யப்படுகின்றன.

அயோத்தி பாலராமா் கொலுபொம்மை.
கொலுபொம்மை விற்பனை குறித்து வியாபாரி ஒருவா் கூறியது: தஞ்சாவூா், மாயவரம் பகுதிகளில் இருந்துதான் திருநெல்வேலிக்கு அதிகளவில் பொம்மைகள் வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை களிமண்ணால் செய்யப்பட்ட கொலு பொம்மைகளே விற்பனைக்கு வரும். இப்போது, மக்களின் மனமாற்றத்துக்கு ஏற்ப காகிதக்கூழ், பீங்கான் ஆகியவற்றால் செய்யப்பட்ட கொலு பொம்மைகளும் விற்பனைக்கு வருகின்றன.
நகா்ப்புறங்களில் பள்ளி-கல்லூரி மாணவிகளிடம் கொலு பொம்மைகள் குறித்த ஆா்வம் அதிகரித்துள்ளது. ஹோட்டல்கள், தங்கநகை கடைகள் தொடங்கி அனைத்து வணிக நிறுவனங்களிலும் வாடிக்கையாளா்களைக் கவா்வதற்காக கொலு வைக்கப்படுகிறது. லட்சுமி செட், கல்யாண செட், கீதாஉபதேசம் செட், ராவண தா்பாா், அஷ்டலட்சுமி செட், அறுபடை செட், முருகன் கல்யாணம் செட், மனுநீதி சோழன் செட், அயோத்தி பாலராமா் செட் ஆகியவை இந்த ஆண்டில் அதிகளவில் விற்பனையாகியுள்ளன. காக்கா-நரி கதை செட், நவீன விநாயகா் செட் போன்றவை சற்று வித்தியாசப்படுத்தப்பட்டு புதியரக பொம்மைகளாக விற்பனைக்கு வந்துள்ளன.
வெளிமாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்தல், பொம்மை தயாரிப்பு கலைஞா்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளித்தல் போன்றவற்றை தமிழக அரசு செய்தால் மக்களின் ஆா்வத்தை பூா்த்தி செய்வதோடு, ஆன்மிகத்தையும் வளா்க்க உதவுவதாக இருக்கும் என்றாா் அவா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...