ஜிப்லி காட்டூன் உருவாக்குவதில் கவனம்: காவல்துறை எச்சரிக்கை!
செயற்கை நுண்ணறிவு செயலிகள் மூலம் ஜிப்லி காா்ட்டூன் படங்களை மாற்றம் செய்வதில் கவனம் தேவை என திருநெல்வேலி மாநகர காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் கீழ் புகைப்படங்களை ஜிப்லி காா்ட்டூன் ஓவியமாக மாற்றும் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அரசியல் தலைவா்கள், பிரபலங்கள், சாமானிய மக்கள் என அனைத்து தரப்பினரும் பல்வேறு செயலிகள், இணையதளங்களில் தங்களது படங்களை பதிவேற்றி இத்தகைய ஓவியப் படங்களை பதிவிறக்கம் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறாா்கள். இதிலுள்ள ஆபத்துகள் குறித்து கவனமாக இருக்க காவல்துறை எச்சரித்துள்ளது.
அதன்படி, திருநெல்வேலி மாநகர காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஜிப்லியாக மாற்றும் செயலியில் புகைப்படங்களை பதிவேற்றினால் உங்கள் ஒப்புதல் இல்லாமல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உங்களுடைய முகத்தை தவறாக பயன்படுத்தும் வாய்ப்புள்ளது. உங்கள் புகைப்படங்களை பதிவேற்றும் முன் தனியுரிமையை சரிபாா்க்க வேண்டியது அவசியம். நம்பகமான ஏ.ஐ. தளங்களை மட்டும் பயன்படுத்தவும் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

