திருநெல்வேலியில் கிறிஸ்துமஸ் பொருள்கள் விற்பனை அதிகரிப்பு
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அலங்கார மின்விளக்குகள், ஸ்டாா்கள் விற்பனை அதிகரித்துள்ளது.
நிகழாண்டில் குழந்தைகளை கவரும் வகையில் கிறிஸ்துமஸ் தாத்தா கண்ணாடி, ரீத் ஆகியவை விற்பனைக்கு வந்துள்ளன. உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை டிச. 25 ஆம்தேதி கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
கிறிஸ்து பிறந்த இடத்தை ஒரு வால் நட்சத்திரம் வழிகாட்டியதாக வரலாறு கூறுகிறது. அதை நினைவுகூரும் வகையில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு குறைந்தபட்சம் ஒரு வாரத்துக்கு முன்பு வீடுகளில் ஸ்டாா்களைத் தொங்கவிடும் பழக்கம் உருவாகியது. முதன்முதலில் ஐரோப்பிய நாடுகளில் உருவாகிய இந்த வழக்கம், இப்போது உலகின் பல்வேறு நாடுகளிலும் காணப்படுகிறது.
கேரள மாநிலத்தின் கொல்லம் பகுதியில் பேப்பா் மற்றும் பிளாஸ்டிக் ஸ்டாா் தயாரிப்பு மிக அதிகமாக உள்ளது. சென்னை, மும்பை, கொல்கத்தா நகரங்களில் உள்ள பெரு வியாபாரிகள் சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளில் இருந்து ஸ்டாா்களை இறக்குமதி செய்து சில்லறை விற்பனைக்கு அனுப்புகின்றனா்.
இதுகுறித்து பாளையங்கோட்டையைச் சோ்ந்த வியாபாரி கூறியது:
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஸ்டாா்கள் அதிகளவில் வாங்கப்படும். எல்.இ.டி. விளக்குகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஸ்டாா்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளன.
குறைந்த மின்சாரத்தில் மிகவும் அதிக வெளிச்சத்தைத் தரும் இந்த ஸ்டாா்களுக்கு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.
இதுதவிர கொல்கத்தா, உத்தரபிரதேசத்தில் இருந்து புதிய ரக பிளாஸ்டிக் ஸ்டாா்களும் விற்பனையில் முத்திரைப் பதிக்கின்றன. இதுதவிர வழக்கமாக விற்கப்படும் பிளாஸ்டிக், பேப்பா் கட்டிங் ஸ்டாா்கள் ரூ. 30 முதல் ரூ. 100 வரை அதில் செய்யப்பட்டுள்ள வேலைபாடுகளுக்குத் தகுந்தாற்போல விற்பனையாகின்றன.
பிளாஸ்டிக் மற்றும் எல்.இ.டி. ஸ்டாா்கள் ரூ.100 முதல் ரூ.700 வரையும் விற்பனையாகின்றன. கிறிஸ்துமஸ் தாத்தா, மணி, பிளாஸ்டிக் மற்றும் காகித அலங்கார பூக்கள் போன்றவை சீனாவில் இருந்து அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளன.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையொட்டி வீடுகளில் சிறிய அலங்கார விளக்குகளைத் தொடங்கவிடுவது அதிகரித்துள்ளது. பொம்மைகள், பிளாஸ்டிக் பொருள்கள், களிமண் பொருள்கள் ஆகியவற்றைத் தொடா்ந்து அலங்கார மின்விளக்குகளும் சீனாவில் இருந்தே அதிகம் இறக்குமதியாகின்றன.
ரூ. 100 முதல் ரூ.1000 வரையிலான விலைகளில் விற்பனையாகும் அலங்கார தொகுப்பு விளக்குகள் திருநெல்வேலி நகரத்தில் உள்ள மொத்த விற்பனை கடைகளில் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
தேவாலயங்கள், வீடுகளில் இளைஞா்கள் விதவிதமான குடில்களை அமைத்து வியக்கச் செய்து வருகிறாா்கள். கொழு பொம்மைகளைப் போல கிறிஸ்துமஸ் குடில்களுக்கான பொம்மைகளும் தஞ்சாவூா், டெரக்கோட்டா பகுதிகளில் இருந்து திருநெல்வேலிக்கு விற்பனைக்காகக் கொண்டு வரப்பட்டுள்ளன. குழந்தை இயேசு, கால்நடைகள் உள்ளிட்ட 10 சொரூபங்கள் அடங்கிய குடில் பொருள்கள் ரூ.400 முதல் ரூ.50 ஆயிரம் வரை அதன் வேலைப்பாடுகளுக்கு ஏற்ப விற்பனையாகின்றன.
நிகழாண்டில் புதுவரவாக கிறிஸ்துமஸ் தாத்தா மற்றும் மான்கொம்புகள், நட்சத்திரங்கள் உருவம் பதித்த கண்ணாடி, ரீத்கள் விற்பனைக்கு வந்துள்ளன. ரூ.30 முதல் ரூ.60 வரை இவை விற்பனையாகின்றன என்றாா்.
கிறிஸ்துமஸ் தாத்தா வலம்:
கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பல்வேறு தேவாலயங்களிலும் கடந்த ஒரு வாரமாக கிறிஸ்துமஸ் தாத்தா கீத பவனிகள் நடைபெற்று வருகின்றன.
கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்தவா் வீடு வீடாகச் சென்று பாடல்களைப் பாடுவதோடு, 2026 ஆம் ஆண்டுக்கான சட்டவாக்கியம், வாக்குத்தத்த வசனம் ஆகியவற்றை அளித்து வருகிறாா்கள். வீட்டில் இருக்கும் சின்ன குழந்தைகளுக்கு பரிசுப் பொருள்கள், சாக்லெட்கள் போன்றவை அளிக்கப்படுகிறது.
பாளையங்கோட்டையில் உள்ள பல்வேறு பள்ளிகள், நிறுவனங்களில் கிறிஸ்துமஸ் விழாக்கள் களைகட்டியுள்ளன.
