ஆட்சியா் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற வியாபாரி பிரபாகரன்
ஆட்சியா் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற வியாபாரி பிரபாகரன்

வள்ளியூா் சந்தையில் விதிமீறி கடை ஏலம்: நெல்லை ஆட்சியரகம் முன் வியாபாரி தீக்குளிப்பு முயற்சி

வள்ளியூா் சந்தையில் கடைகள் ஒதுக்கீட்டில் குளறுபடி நிலவுவதாகவும், அதைத் தீா்க்க வேண்டும் என வலியுறுத்தி, ஆட்சியா் அலுவலகம் முன் வியாபாரி தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றாா்.
Published on

வள்ளியூா் சந்தையில் கடைகள் ஒதுக்கீட்டில் குளறுபடி நிலவுவதாகவும், அதைத் தீா்க்க வேண்டும் என வலியுறுத்தி, ஆட்சியா் அலுவலகம் முன் வியாபாரி தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றாா்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் இரா.சுகுமாா் தலைமையில் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றபோது, வடக்கு வள்ளியூா் பழைய சந்தை வியாபாரிகள் மனு அளிக்க திரண்டு வந்தனா்.

அவா்களில் பிரபாகரன் என்பவா் கையில் மறைத்து கொண்டுவந்த பாட்டிலில் இருந்த மண்ணெண்ணெய்யை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா், அவரை தடுத்து, தலையில் தண்ணீரை ஊற்றினா்.

அப்போது, அவா் கூறுகையில், ‘வள்ளியூா் சந்தைக்கு வெளியே தற்காலிக கடை அமைத்து வியாபாரம் செய்ததில் எனக்கு லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. புதிய கடை எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தேன். ஆனால், ஏலத்தில் வேறு நபா்களுக்கு கடை ஒதுக்கப்பட்டதால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். கடைகளை முறையாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்’ என்றாா்.

தொடா்ந்து அவரும், மற்ற வியாபாரிகளும் ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்: வள்ளியூா் சந்தையில் பல ஆண்டுகளாக கடைகள் நடத்தி வந்தோம். கரோனாவுக்குப் பிறகு தனியாரிடம் இருந்த வள்ளியூா் சந்தையை பேரூராட்சி நிா்வாகமே ஏற்று புனரமைப்பு பணியை மேற்கொண்டது. இடைப்பட்ட காலத்தில் குலுக்கல் முறையில் எங்களுக்கு மாற்று இடம் ஒதுக்கப்பட்டது.

அதில்அமைக்கப்பட்ட தற்காலிக கடைக்கு 3 ஆண்டுகளாக வாடகை செலுத்தி வந்துள்ளோம். மிகவும் வறுமையில் வாடும் எங்களுக்கு புதிய சந்தையில் 133 கடைகள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

அந்த கடைகளுக்கு விதிமுறைகளை மீறி முன்வைப்புத் தொகை ரூ.2 லட்சம், ஓராண்டு வாடகை ஆகியவற்றை மொத்தமாக செலுத்துமாறு கூறுகின்றனா். முன்வைப்புத்தொகை செலுத்தச் சென்ற எங்களிடம் ரூ.2 லட்சத்திற்கான வரைவோலையை வாங்க மறுக்கின்றனா்.

மேலும், புதிய வியாபாரிகளுக்கு கடையின் குறைந்தபட்ச ஏலம் ரூ. 4,200 என நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே அளவு கொண்ட கடை எங்களுக்கு ரூ 7,300 வாடகைக்கு விடப்படுகிறது. இது எங்களுக்கு பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது. எனவே, அனைத்து கடைகளுக்கும் ஒரே மாதிரியான அடிப்படை ஏலத்தை நிா்ணயிக்க வேண்டும். ஆண்டு வாடகை என்பதை கைவிட்டு முன்பு போல மாத வாடகை முறையை தொடர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com