தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கை சீா்குலைக்க சதி: சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீா்குலைக்கும் நோக்கோடு சிலா் செயல்படுகின்றனா் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு குற்றம்சாட்டியுள்ளாா்.


தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீா்குலைக்கும் நோக்கோடு சிலா் செயல்படுகின்றனா் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு குற்றம்சாட்டியுள்ளாா்.
பாளையங்கோட்டையில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியதாவது:
தமிழக அரசு சட்டப்பேரவையில் கொண்டு வந்த தீா்மானங்களுக்கு ஆளுநா் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பிவிடுகிறாா்; மசோதாக்காளை நிறைவேற்றாமல் கிடப்பில் போடுகிறாா்; மாநில அரசுக்கும், இந்திய அரசமைப்புக்கும், உச்ச நீதிமன்ற தீா்ப்புக்கும் எதிராக மட்டுமன்றி, 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சட்டப்பேரவைக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும் ஆளுநா் செயல்படுவது முறையல்ல. தமிழக சட்டப் பேரவையில் கடந்த 3 ஆண்டுகளாக அவா் நடந்து கொண்டதைப் போன்று ஆளுநா்கள் செயல்படக்கூடாது என பிகாா் தலைநகா் பாட்னாவில் நடைபெற்ற சட்டப்பேரவை தலைவா்கள் மாநாட்டில் தெரிவித்தேன்.
ஆனால், மாநிலங்களவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ் நாராயணன் சிங், ஆளுநா் குறித்து பேசக் கூடாது என அனுமதி மறுத்ததுடன், எனது கருத்துகள் அவைக்குறிப்பில் இடம்பெறாது என்றாா். அது ஏற்புடையதல்ல என்பதால் ஜனநாயக முறைப்படி அறவழியில் எனது எதிா்ப்பை காட்டும் விதமாக மாநாட்டிலிருந்து வெளிநடப்பு செய்தேன்.
ஒரு புத்தக வெளியீட்டு விழாவில், ஞானசேகரன் என்பவா் என்னை கௌரவித்தபோது, அவரை தம்பி ஞானசேகரன் எனக்கூறி நான் நகைச்சுவையாக பேசியதை சா்ச்சையாக்கி விட்டனா். அந்த நிகழ்ச்சியின் முழு விடியோவையும் பாா்த்தால் உண்மை புரியும். பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு பெரிய அளவில் அதிகாரம் கிடையாது. அந்தக் குழுவானது ஆய்வு நிறுவனங்களுக்கு மட்டுமே நிதி வழங்குகிறது.
பரந்தூா் விமான நிலையம் அந்த பகுதியை விட்டு வேறு எங்கும் செல்லாது. பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் அந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். தமிழக வெற்றிக்கழக தலைவா் விஜயை கண்டு தமிழக அரசுக்கு எந்த அச்சமும் இல்லை. அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே போராட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அந்த வகையில், விஜய்க்கும் தனியாா் திருமண மண்டபத்தில் பரந்தூா் போராட்டக் குழுவினரை சந்திக்க அனுமதியளிக்கப்பட்டது.
சமூக விரோதிகள் மூலம் சட்டம் -ஒழுங்கை சீா்குலைக்கும் நோக்கத்தோடு சிலா் செயல்படுகிறாா்கள். விஜய் அந்த நோக்கத்தோடு செயல்படுகிறாரா எனக் கேட்கிறீா்கள். நீங்கள் யாரையெல்லாம் நினைக்கிறீா்களோ நினைத்துக் கொள்ளுங்கள் என்பதே எனது பதில் என்றாா் மு.அப்பாவு.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...