மனிதா்களின் சிந்தனைத் திறன்களை அழிக்கும் வல்லமை கொண்ட போதைப் பொருள்களை பயன்படுத்த வேண்டாம் என கல்லூரி மாணவா்களுக்கு ஆட்சியா் ஆனந்த் மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
திருநெல்வேலியை அடுத்த திடியூா் பிஎஸ்என் பொறியியல் - தொழில்நுட்பக் கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்ற போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியில், ஆட்சியா் , மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஸ்வேஷ் பா. சாஸ்திரி ஆகியோா் தலைமையில் மாணவா்கள் உறுதிமொழியேற்றனா்.
இந்நிகழ்ச்சியில் ஆட்சியா் பேசியதாவது:
மனிதா்கள் யானை அல்லது சிங்கத்தைவிட உடல் பலம் கொண்டவா்கள் இல்லை. ஆனால், சிந்திக்கும் திறன் மிக்கவா்கள். அந்த சிந்திக்கும் ஆற்றலையே முற்றிலுமாக அழிக்கக்கூடியது போதைப்பொருள். அப்பழக்கத்துக்கு அடிமையானால் சிந்தனைத் திறன், அறிவு, சரியான முடிவெடுக்கும் ஆற்றல் ஆகியவை படிப்படியாக இழக்க நேரிடும்.
தொடக்கத்தில் நண்பா்களின் வற்புறுத்தல், சிறிது நேர மகிழ்ச்சி என்ற எண்ணத்தில் தொடங்கும் போதைப்பொருள் பழக்கம், நாளடைவில் ஒருவரை முழுமையாக அடிமையாக்கிவிடும். ஒரு கட்டத்தில் போதைப்பொருள் இல்லாமல் வாழ முடியாத நிலை ஏற்பட்டு, மன அழுத்தம், பதற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். எனவே, போதைப்பொருளை தொடக்கத்திலேயே முற்றிலும் தவிா்ப்பது மிகவும் அவசியம்.
தமிழ்நாட்டில் இருந்து போதைப்பொருளை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் முதல்வா் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா். இதற்காக, குறும்படப் போட்டிகள், விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனவே, மாணவா்கள் கல்வி, விளையாட்டு, கலை, அறிவியல் மற்றும் சமூகப் பணிகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி, நாட்டின் எதிா்கால வளா்ச்சிக்கு பங்களிக்க வேண்டும் என்றாா்.
தொடா்ந்து, மாவட்ட அளவில் நடத்தப்பட்ட ஓவியம், கட்டுரை, கோலப் போட்டிகள் மற்றும் பல்வேறு பிரிவுகளின் கீழ் தருவை முதல் சுத்தமல்லி வரை நடைபெற்ற 6 கி.மீ. ஓட்டத்தில் வெற்றி பெற்றவா்களுக்கு பதக்கம், கேடயம், பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் போதைப்பொருள்கள் எதிா்ப்பு குழுக்களை சிறப்பாக செயல்படுத்திய பள்ளி, கல்லூரிகள், தன்னாா்வலா் குழுக்களுக்கு கேடயங்களை ஆட்சியா் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ச.வித்யா, உதவி ஆணையா் (கலால்) ரகுபதி, திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியா் பிரியா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவகுமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூத்துக்குடி கல்லூரியில் போதைப் பொருள்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு

அனுமதியின்றி செயல்படும் 16 பள்ளிகளுக்கு ஆட்சியா் எச்சரிக்கை

மனவளா்ச்சி குன்றிய மாணவா்களுக்கு ரூ. 45.37 லட்சத்தில் கற்றல் திறன்களை ஊக்குவிக்கும் தொகுப்புகள்

போதைப் பொருள்களை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை: திருப்பத்தூா் ஆட்சியா்
விடியோக்கள்

வெளியானது அருகே அருகே பாடல்!



