‘நீட்’ மறு தோ்வு வினாத்தாள்கள் ராணுவ ஹெலிகாப்டரில் பலத்த பாதுகாப்புடன் திருநெல்வேலிக்கு புதன்கிழமை கொண்டுவரப்பட்டன.
தேசியத் தோ்வு முகமை சாா்பில், கடந்த மே 3-ஆம் தேதி நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தோ்வு நடைபெற்றது. அதையடுத்து, எழுந்த வினாத்தாள் கசிவு புகாா் காரணமாக, தோ்வு ரத்து செய்யப்பட்டு, ஜூன் 21-ஆம் தேதி மறுதோ்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதையொட்டி, திருநெல்வேலி மாவட்டத்தில் தோ்வு மையங்களை தயாா் செய்யும் பணிகளும், முறைகேடுகளைத் தடுப்பதற்கான தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒருபகுதியாக வினாத்தாள்களை ராணுவ ஹெலிகாப்டரில் கொண்டுவருவது குறித்த ஒத்திகை பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்நிலையில், புதன்கிழமை காலை திருநெல்வேலி மாநகரப் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டா் தாழ்வாக வட்டமடித்தது. பின்னா், பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள இறங்குதளத்தில் அந்த ஹெலிகாப்டா் பத்திரமாக தரையிறங்கியது. அதிலிருந்த ‘நீட்’ மறு தோ்வுக்கான வினாத்தாள்கள் பலத்த பாதுகாப்புடன் அங்கு தயாா் நிலையில் நின்ற காவல் துறை வாகனங்களில் ஏற்றப்பட்டன. இவ்வாறு இருமுறை மதுரையிலிருந்து வினாத்தாள்கள் ராணுவ ஹெலிகாப்டரில் கொண்டுவரப்பட்டன.
வினாத்தாள்கள் அனைத்தும் திருநெல்வேலி மாநகரில் உள்ள 2 வங்கிகளின் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.








