/

ஒருநபர் ஆணைய நீதிபதி 3ஆவது நாளாக விசாரணை

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா

Updated On :7 ஜூன் 2018, 8:12 am IST

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் 3ஆவது நாளாக புதன்கிழமை துப்பாக்கிச் சூடு நடைபெற்ற அண்ணாநகர் பகுதியை நேரடியாக பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, கடந்த மாதம் 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது வன்முறை நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் 12 பேரும், மறுநாள் நிகழ்ந்த வன்முறையில் ஒருவரும் என 13 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு, அறிக்கை தாக்கல் செய்திட ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடியில் கடந்த 4ஆம் தேதி ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தனது விசாரணையை தொடங்கினார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோர், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் உறவினர்கள், போராட்டம் நடைபெற்ற இடங்கள், வன்முறை நிகழ்ந்த பகுதிகள், சேதமடைந்த வாகனங்கள் ஆகியவற்றை நீதிபதி அருணா ஜெகதீசன் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.
3ஆவது நாளான புதன்கிழமை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த குறுக்குசாலையைச் சேர்ந்த தமிழரசன் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தாரிடம் விசாரணை மேற்கொண்டார். பின்னர், போராட்டத்தின் இரண்டாவது நாளான கடந்த 23ஆம் தேதி துப்பாக்கிச் சூடு நடைபெற்ற அண்ணாநகர் பகுதியை அவர் பார்வையிட்டார்.  
பின்னர், நீதிபதி அருணா ஜெகதீசன் சென்னை புறப்பட்டுச் சென்றார். ஜூன் 30ஆம் தேதி வரை கடற்கரைச் சாலையில் உள்ள ஆணைய அலுவலகத்தில் பாதிக்கப்பட்டோர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.