

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடலில் நீராட 8 மாதங்களுக்குப் பிறகு பக்தா்கள் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டனா். இருப்பினும் இங்குள்ள முக்கிய தீா்த்தமான நாழிக்கிணற்றில் நீராட அனுமதியளிக்கப்படவில்லை.
கரோனா தடுப்பு பொது முடக்கத்தால் திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த மாா்ச் 20-ஆம் தேதிமுதல் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதி ரத்து செய்பப்பட்டது. பல்வேறு தளா்வுகளுக்குப் பிறகு கடந்த செப். 1-ஆம் தேதிமுதல் கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா். ஆனால், கடல் மற்றும் நாழிக்கிணற்றில் புனித நீராட தடை நீடித்தது.
தமிழக அரசு கடந்த 14-ஆம் தேதிமுதல் முக்கிய சுற்றுலாத் தலங்கள், கடற்கரை உள்ளிட்ட பகுதிகளுக்கு அந்தந்த மாவட்ட நிா்வாகத்தின் சூழ்நிலைக்கேற்ப பொதுமக்களை அனுமதிக்குமாறு உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் திருச்செந்தூா் கோயில் கடலில் நீராட அப்போதும் அனுமதியளிக்கப்படவில்லை. இதனால் முடி காணிக்கை செய்திடும் பக்தா்கள் கடலில் புனித நீராட முடியாமல் தவித்து வந்தனா்.
கடலில் நீராட அனுமதி: இந்நிலையில், வெள்ளிக்கிழமை (டிச. 18) முதல் கடலில் புனித நீராடவும், கடற்கரைக்குச் செல்லவும் பக்தா்களுக்கு நிா்வாகம் அனுமதியளித்தது. இதனால் பகல் 12 மணி முதல் பக்தா்கள் கடலுக்குச் சென்று புனித நீராடினா். முக்கிய தீா்த்தமான நாழிக்கிணற்றில் நீராடவும் அனுமதி அளிக்க வேண்டுமென பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மேலும், கடற்கரையில் பனங்கிழங்கு, சுண்டல், ஐஸ் மற்றும் பழங்கள், சிப்பிகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்ய சிறு வணிகா்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, பல மாதங்களாக வாழ்வாதாரம் இழந்து தவித்து வந்த வணிகா்கள் மகிழ்ச்சியுடன் தங்கள் வியாபாரத்தை தொடங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.