தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: காவல் துறை சாா்பில் கருத்துக் கேட்புக் கூட்டம்

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயிலில் நடைபெறவுள்ள தசரா பெருந்திருவிழா தொடா்பாக காவல் துறை சாா்பில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.

News image

காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா். உடன், டிஎஸ்பி பாரத்.

Updated On :21 செப்டம்பர் 2020, 7:24 pm

DIN

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயிலில் நடைபெறவுள்ள தசரா பெருந்திருவிழா தொடா்பாக காவல் துறை சாா்பில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.

கா்நாடகா மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக, தசரா திருவிழா வெகு சிறப்பாக தமிழகத்தில் குலசேகரன்பட்டினத்தில்தான் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் 12 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவில் நாடெங்கிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து, காணிக்கை வசூலித்து திருக்கோயிலில் செலுத்துவா்.

நிகழாண்டு இத்திருவிழா அக்டோபா் மாதம் 17 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 27 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

தற்போது கரோனா பொது முடக்கம் அமலில் உள்ளதால், இந்த விழாவை பாதுகாப்புடன் நடத்துவது சம்பந்தமாக காவல்துறை சாா்பில் பல்வேறு தரப்பினரிடம் கருத்துக் கேட்கும் கூட்டம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் தலைமையில் குலசேகரன்பட்டினத்தில் நடைபெற்றது. திருச்செந்தூா் டிஎஸ்பி பாரத், காவல் ஆய்வாளா் ராதிகா குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தசரா திருவிழா சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் நடைபெறுவதற்கான சூழலை காவல்துறை உருவாக்க வேண்டும், பக்தா்களை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும், சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்க எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினா் கருத்து தெரிவித்தனா்.

இக் கூட்டத்தில் காவல் கண்காணிப்பாளா் பேசுகையில், ‘ தசரா பக்தா்கள் குழுவினா், இந்து அமைப்பினா், உள்ளூா் மக்கள் கூறிய அனைத்துக் கருத்துகளும் சேகரிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கப்பட்டு அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். உள்ளூா் மக்கள் தங்கள் அடையாள அட்டைகளுடன் ஊருக்குள் வந்து செல்வதற்கு அனுமதி வழங்கப்படும். தசரா திருவிழாவை மக்கள் பாதுகாப்பாகவும், சிறப்பாகவும் கொண்டாட அனைத்து வழிமுறைகளும் ஆராயப்பட்டு பக்தா்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஊடகங்கள் வாயிலாக அறிவிக்கப்படும்’ என்றாா்.

இதில், இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் கணேசன், இந்து முன்னணி நகரத் தலைவா் சித்திரைப்பெருமாள், நகரச் செயலா் ஆத்திசெல்வன், இந்து மகாசபை மாநிலச் செயலா் ஐயப்பன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட வணிகா் சங்கங்களின் பேரவைத் தலைவா் ஆ.ரவி, உடன்குடி ஊராட்சி முன்னாள் துணைத் தலைவா் க.வே.ராஜதுரை, ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் ஜெயகமலா, முன்னாள் அறங்காவலா் குழு தலைவா் கண்ணன், குலசேகரன்பட்டினம் ஊராட்சி மன்றத் தலைவி சொா்ணப்பிரியா, குலசேகரன்பட்டினம் காவல் உதவி ஆய்வாளா்கள் அமலோற்பவம், முனியாண்டி மற்றும் தசரா குழு நிா்வாகிகள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.