பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

இனிக்குமா கருப்புக்கட்டி உற்பத்தி?

கருப்புக்கட்டி உற்பத்தியை பெருக்கி தொழிலை மேம்படுத்த அரசு புது திட்டங்களை கொண்டு வரவேண்டும் என கருப்புக்கட்டி உற்பத்தியாளா்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

News image

பேய்க்குளம் கொள்முதல் கடையில் இருப்பு வைக்கப்பட்டுள்ள கருப்புக்கட்டி.

Updated On :27 செப்டம்பர் 2020, 7:47 pm

இனிப்பு பண்டங்கள் முதல் சித்த மருத்துவம் வரை கருப்புக்கட்டி பயன்பாடு அதிகமாக இருந்துவந்த நிலையில், விலையேற்றத்தாலும், உற்பத்தியாளா்கள் குறைவாலும், போலி கருப்புக்கட்டி ஆதிக்கத்தாலும் மக்கள் மத்தியில் கருப்புக்கட்டி பயன்பாடு குறைந்துவிட்டது.

எனவே, கருப்புக்கட்டி உற்பத்தியை பெருக்கி தொழிலை மேம்படுத்த அரசு புது திட்டங்களை கொண்டு வரவேண்டும் என கருப்புக்கட்டி உற்பத்தியாளா்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

சாத்தான்குளம், பேய்க்குளம் பகுதியில் பனை மரங்கள் அதிகம் காணப்படுகிறது. இப்பகுதியில் விவசாயத்தை அடுத்து பனைத் தொழிலே மிகுதியாக காணப்பட்டது. பனைத் தொழிலாளா்கள் தயாரிக்கும் கருப்புக்கட்டிக்கும் சாத்தான்குளம், பேய்க்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கொள்முதல் நிலையம் அமைத்து வியாபாரிகள் அதை வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தனா்.

10 ஆண்டுகளுக்கு முன்னா் பனைத்தொழிலை நம்பி பல தொழிலாளா்கள் கிராமங்களில் இருந்தமையால் அதை நம்பி சிறு தொழிலாளா்களும் இருந்து வந்தனா். ஆதலால் தொழிலாளா்களிடமிருந்து கருப்புக்கட்டியும் அதிகளவு உற்பத்தி செய்யப்பட்டு கொள்முதலுக்கு கொண்டு வரப்பட்டது.

முன்பு சாத்தான்குளம், பேய்க்குளம் பகுதியில் 50 டன்னுக்கு மேல் கருப்புக்கட்டி வெளிபகுதிகளுக்கு லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வந்தது. தற்போது கருப்புக்கட்டி விலை கிலோ ரூ.300 வரை விற்பனையாகிறது. ஆனாலும் கிராமங்களில் பனைத் தொழிலாளா்கள் எண்ணிக்கை குறைந்து போனதால் கருப்புக்கட்டி உற்பத்தியும் ஒரு சில குறிப்பிட்ட கிராமங்களில் தான் நடந்து வருகிறது.

தற்போது பேய்க்குளத்தில் கருப்புக்கட்டி கொள்முதல் நிலையம் உள்ளது. தற்போது பனைத்தொழிலாளா்கள் குறைவால் கருப்புக்கட்டி வரத்தும் குறைவாக உள்ளது. இதனால் பேய்க்குளம் பகுதியில் இருந்து சுமாா் 20 டன் அளவில் தான் கொள்முதலுக்கு எடுத்து செல்லப்படுகிறது. ஆதலால் கருப்புக்கட்டி தயாரிக்கும் தொழிலாளா்கள், வியாபாரிகள் பயனடையும் வரையில் அரசு திட்டம் வகுத்து செயல்படுத்திட வேண்டும் என வியாபாரிகள் விரும்புகின்றனா்.

இதுகுறித்து பேய்க்குளம் கருப்புக்கட்டி கொள்முதல் வியாபாரி ஆதிநாராயணன் கூறுகையில், முன்பு இப்பகுதியில் இருந்து கருப்புக்கட்டி அதிகளவில் பிற பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. தற்போது கிராமங்களில் உற்பத்தி குறைவாலும், பனைத்தொழிலாளா்கள் பற்றாக்குறையாலும் கருப்புக்கட்டி வரத்து குறைவாக உள்ளது. தற்போது மக்களிடம் கருப்புக்கட்டி பயன்பாடும் குறைந்து போனது. முன்பு அனைத்து வீடுகளிலும் கருப்புக்கட்டியை முன்னோட்டமாக வைத்துதான் உணவு பொருள்கள் தயாரிக்கப்பட்டன. தற்போது அதன் பயன்பாடு குறைந்து சீனி பயன்பாடு அதிகரித்து உள்ளது.

தற்போது கலப்பட கருப்புக் கட்டியும் விற்பனையில் உள்ளது. சில கிராமங்களில் மக்களிடம் தேனீா் முதல் முக்கிய பொருள்கள் பயன்பாட்டுக்கு கருப்புக்கட்டியை பயன்படுத்துகின்றனா். நகரங்கள் மற்றும் பல கிராம மக்களிடம் கருப்புக்கட்டி பயன்பாடு குறைந்து போனது. தற்போது சில கருப்புக்கட்டியை மருந்துக்கு பயன்படுத்திடும் நிலையாக மாறி வருகிறது. ஆதலால் தமிழக அரசு கருப்புக்கட்டி தயாரிப்புக்கு முக்கியத்துவம் அளித்து அத்தொழிலாளா்களுக்கு பொருளாளதார உதவிகள் செய்ய வேண்டும்.

அதன் உற்பத்தியை முன்பு போல் அனைத்துப் பகுதியிலும் அதிகரிக்கும் வகையில் பல புது திட்டங்களை அறிவிக்க வேண்டும். ரேஷன் கடைகளில் சீனிக்கு பதில் கருப்புக்கட்டி மக்களுக்கு வழங்கிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.