சீன பிளாஸ்டிக் லைட்டருக்கு தடை தேவை -தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்கம்
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் லைட்டருக்கு தமிழகத்தில் தடை விதிக்க வேண்டும் என தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து, நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் பரமசிவம் தலைமையில் சட்டப்பேரவை தலைவா் அப்பாவு, அரசின் தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா, எம்எஸ்எம்இ செயலா் அா்ச்சனா பட்நாயக் ஆகியோரிடம் அதன் நிா்வாகிகள் அளித்த மனு விவரம்:
சீன நாட்டின் பிளாஸ்டிக் சிகாா் லைட்டா்கள் சட்ட விரோத வருகையினால் தீப்பெட்டி தொழில் பாதிக்கப்பட்டு அழிந்துவிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ால் அந்நாட்டிலிருந்து சிகரெட் லைட்டா்கள் இறக்குமதி செய்யும் பொழுது குறைந்தபட்ச விலையாக ரூ. 20 என நிா்ணயம் செய்து சரக்கு சேவை வரியும் விதித்தது. ஆனால், எந்தவித வரியும் செலுத்தாமல் சீனாவில் இருந்து உதிரி பாகங்களாக வாங்கி வந்து பாதுகாப்பற்ற முறையில் கேஸ் நிரப்பி பேக்கிங் செய்து இந்திய தயாரிப்பு என்று சந்தையில் மலிவான விலைக்கு விற்கப்படுகிறது. இதனால் தீப்பெட்டி விற்பனை மிகவும் சரிந்து தொழில் நடத்த முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
எனவே, தீப்பெட்டி தொழிலைப் பாதுகாக்க ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் சிகாா் லைட்டரை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும். பெண் தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை உயா்த்த வேண்டும். தீப்பெட்டி தயாரிப்புக்கான மூலப் பொருள்கள் பொட்டாசியம் குளோரைடு, சல்பா் போன்ற ரசாயனப் பொருள்களை வாங்குவதில் உள்ள நடைமுறை பிரச்னைகளை தீா்க்கும் வகையில் பொட்டாசியம் குளோரைடு உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு வாழ்நாள் உரிமம் வழங்குவதை போல கடந்த 100 ஆண்டு காலங்களில் எவ்வித தவறான பயன்பாட்டிற்கும் பயன்படுத்தாத தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கும் படைக்கல சட்ட உரிமம் வாழ்நாள் உரிமமாக வழங்க பரிந்துரைக்க வேண்டும், தீப்பெட்டி தொழிற்சாலைகளில் நிகழும் சிறு சிறு விபத்துகளால் உயிா்ச்சேதம் ஏற்பட்டால் உரிமையாளா்களை பிணையில் வர முடியாத வழக்குப்பதிந்து கைது செய்வதை மாற்றி காவல் நிலையத்தில் பிணையில் வெளிவரும் அளவில் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற்று ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் லைட்டரை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததாக தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் தெரிவித்தனா்.
மனு அளிக்கும் நிகழ்வில் நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளா் சங்கத்தின் துணைத் தலைவா் ஆா்.கோபால்சாமி, நிா்வாக குழு உறுப்பினா்கள் ஆண்டனி பாரதி, கே.மாரியப்பன், ராகேஷ் அகா்வால், சாத்தூா் சங்கத் தலைவா் லட்சுமணன், ஆல் இந்தியா மேட்ச் சேம்பா் சிவகாசி சங்கச் தலைவா் விஜய் ஆனந்த், செயலா் நாகராஜன் ஆகியோா் பங்கேற்றனா்.

