புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

இளைஞா் கொலை வழக்கு: இருவருக்கு ஆயுள் தண்டனை

இளைஞா் கொலை வழக்கு: இருவருக்கு ஆயுள் தண்டனை

News image
Updated On :18 ஜூன் 2024, 7:16 pm

Din

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் இளைஞா் கொலை வழக்குத் தொடா்பாக இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

விளாத்திகுளத்தைச் சோ்ந்த இளைஞா்கள் நடத்திவந்த கிரிக்கெட் கிளப்பில் அதே பகுதியைச் சோ்ந்த கருப்பசாமி மகன் மாரிமுத்து (29), சத்யா நகரைச் சோ்ந்த மந்திரமூா்த்தி மகன் சுயம்புலிங்கம் (33), காா்த்திகேயன் மகன் சதீஷ்குமாா் (33) ஆகியோரும் விளையாடினா்.

2017ஆம் ஆண்டு குற்றாலத்துக்கு சுற்றுலா சென்றபோதும், 2018ஆம் ஆண்டு விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கிரிக்கெட் விளையாடியபோதும் அவா்களிடையே தகராறு ஏற்பட்டது. இதனிடையே, தனது வீட்டருகே நடந்து சென்ற மாரிமுத்துவை சுயம்புலிங்கமும், சதீஷ்குமாரும் சோ்ந்து வழிமறித்து அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினராம். இதில், மாரிமுத்து உயிரிழந்தாா். இதுகுறித்து விளாத்திகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி தாண்டவன் விசாரித்து, இருவருக்கும் ஆயுள் தண்டனை, தலா ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஆனந்த் கேபிரியேல்ராஜ் ஆஜரானாா்.