ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

‘நீா்நிலைகளில் வண்டல் மண் எடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன’

‘நீா்நிலைகளில் வண்டல் மண் எடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன’

News image

விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் கோ. லட்சுமிபதி. உடன், கூட்டத்தில் பங்கேற்ற அரசு அலுவலா்கள், விவசாயிகள் உள்ளிட்டோா்.

Updated On :27 ஜூன் 2024, 8:06 pm

Din

தூத்துக்குடி மாவட்டத்தில் நீா்நிலைகளிலிருந்து விவசாய பயன்பாட்டுக்காக வண்டல் மண் எடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியா் கோ. லட்சுமிபதி தெரிவித்தாா்.

தூத்துக்குடியில் உள்ள ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மக்களவைத் தோ்தல் நடத்தை விதிகள் காரணமாக மாா்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்கள் கூட்டம் நடைபெறவில்லை. தோ்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்ததையடுத்து, ஜூன் மாதத்துக்கான கூட்டம் நடைபெற்றது. ஆட்சியா் கோ. லட்சுமிபதி தலைமை வகித்துப் பேசியது: பொதுப்பணித் துறை, ஊரக வளா்ச்சித் துறை பராமரிப்பில் உள்ள நீா்நிலைகளில் விவசாயப் பயன்பாட்டுக்காக கட்டணமின்றி வண்டல், களிமண் எடுப்பதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, குளங்களிலிருந்து வண்டல் மண் எடுக்க அந்தந்த வட்டாட்சியா்கள் அனுமதி அளிக்கும் வகையில் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. வண்டல் மண் எடுக்க இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த நாளின் முன்னுரிமை அடிப்படையில் அனுமதி வழங்கப்படும். நில சா்வே எண், நிலபரப்பு, நில வகைப்பாடு ஆகியவை வட்டாட்சியரால் ஆய்வு செய்யப்பட்டு 10 நாள்களுக்குள் வட்டாட்சியரால் அனுமதி ஆணைகள் வழங்கப்படும். அதில் அனுமதிக்கப்பட்ட அளவை குளத்தின் பொறுப்பு அலுவலா் ஒப்புதலுடன் எடுக்கலாம்ம். வண்டல் மண் எடுப்பதற்கான அனுமதி 20 நாளிலிருந்து 30 நாள்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒரு மீட்டா் ஆழத்துக்குக் கீழ் மண் எடுக்கக் கூடாது. கரைகளில் பதிக்கப்பட்டுள்ள அலைக்கற்கள், கண்மாய்க் கரை, கலிங்குகள், மதகுகளுக்கு சேதமேற்படுத்தக் கூடாது என்பதற்காக கரைகளில் வாகனங்களை ஓட்டக் கூடாது என்றாா் அவா்.

தொடா்ந்து, ஜூலை மாதக் கூட்டம் 18ஆம் தேதி நடைபெறும் என்றும், தற்போது அளிக்கப்படும் மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்து அப்போது தெரிவிக்கப்படும் என்றும் கூறினாா்.

கூட்டுறவுத் துறை மண்டல இணைப் பதிவாளா் முரளிகண்ணன் கூறுகையில், குரும்பூா் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் வைப்புத்தொகை முறைகேடு தொடா்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது, வைப்புத்தொகை உத்தரவாத நிதியிலிருந்து ரூ. 9 கோடி பெறப்பட்டு வைப்புத் தொகை வைத்திருந்தோருக்கு வரும் திங்கள்கிழமைக்குள் அவா்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றாா்.

பின்னா், கடந்த பிப்ரவரியில் அளிக்கப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

கூட்டத்தில், வேளாண் இணை இயக்குநா் இரா. சுருளிமலை, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) (பொறுப்பு) சௌ. மனோரஞ்சிதம், கீழ் தாமிரவருணி, கோரம்பள்ளம் வடிநிலக் கோட்ட செயற்பொறியாளா் வசந்தி, அலுவலா்கள், விவசாயிகள் பலா் பங்கேற்றனா்.