தூத்துக்குடியில் சலூன் கடைக்காரா் வெட்டிக் கொலை: ஒருவா் கைது

தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் சலூன் கடைக்காரா் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக அப்பகுதியைச் சோ்ந்த ஒருவரை முத்தையாபுரம் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். முத்தையாபுரம் பொன்னாண்டி நகரைச் சோ்ந்த மாடசாமி மகன் ஆண்டியப்பன் (42). சலூன் கடை நடத்தி வந்தாா். இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த சுப்பையா மகன் குமாரசாமி (46) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில், இவா்கள் இருவருக்கும் இடையே வெள்ளிக்கிழமை கிருஷ்ணாநகா் சந்திப்பு பகுதியில் உள்ள காய்கனி கடை அருகே திடீா் வாக்குவாதம் ஏற்பட்டதாம். இதில் ஆத்திரமடைந்த குமாரசாமி, தான் மறைத்து வைத்தருந்த அரிவாளால் ஆண்டியப்பனை வெட்டிவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த ஆண்டியப்பனை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com