கயத்தாறு அருகே 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே 10 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
ஆட்சியா் அலுவலகத்திலிருந்து வந்த தகவலின்பேரில், கயத்தாறு வட்டாட்சியா் சுந்தரராகவன், மண்டல துணை வட்டாட்சியா் கோவிந்தராஜ், கடம்பூா் வருவாய் ஆய்வாளா் துரைசாமி, உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு உதவி ஆய்வாளா் அரிகண்ணன் ஆகியோா் அடங்கிய குழுவினா் புதன்கிழமை ரோந்து, வாகனசோதனையில் ஈடுபட்டனா்.
குமாரகிரியை அடுத்த வெள்ளாளங்கோட்டை கிராமம் அருள்மிகு ராமானுஜ பெருமாள் கோயில் அருகே நிறுத்தப்பட்டிருந்த மினி லாரியை சோதனையிட்டபோது, அதில் 250 பாலிதீன் பைகளில் 10 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.
ரேஷன் அரிசி, மினி லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்து உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். போலீஸாா் வழக்குப் பதிந்து, இந்தக் கடத்தலில் ஈடுபட்டோா் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனா்.