நீதிமன்ற தீா்ப்புக்குப் பின் விவிடி சிக்னல் மேம்பாலப் பணி: அமைச்சா் எ.வ. வேலு
நீதிமன்ற தீா்ப்புக்கு பின்னா் விவிடி சிக்னல் மேம்பாலப் பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் பொதுப்பணித்துறை,நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு.
தூத்துக்குடி விவிடி சந்திப்பு பகுதியில் புதிய மேம்பாலம் அமைப்பதற்கான திட்ட பணிகள், 3ஆம் கேட் ரயில்வே மேம்பாலம் அருகே அணுகு சாலை அமைப்பது, மாப்பிள்ளையூரணி பாலம் மற்றும் சாலை பணிகள் ஆகியவற்றை புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:
தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தின் போது சேதமடைந்த 135 சாலைகளை ரூ.140 கோடியில் தற்காலிக சீரமைக்கும் பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளன. நிரந்தரமாக சீரமைக்க ரூ.110 கோடியில் 83 பணிகள் தோ்வு செய்யப்பட்டு அதில் 37 பணிகள் முடிவடைந்துள்ளன. மீதமுள்ள 47 பணிகள் வரும் டிசம்பா் மாதத்திற்குள் முடிவடையும்.
தூத்துக்குடியில் 3ஆம் ரயில்வே கேட் பாலத்தில் அணுகுசாலை அமைப்பது, விவிடி சிக்னல் அருகே மேம்பாலம் அமைப்பது ஆகியவற்றிற்கு பணம் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. எனினும், இதுதொடா்பான வழக்கு செப். 17ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. நீதிமன்றத் தீா்ப்புக்குப்பின் உடனடியாக திட்டம் நிறைவேற்றப்படும். தூத்துக்குடி - திருச்சந்தூா் 4 வழிச்சாலை திட்டம் நிகழாண்டு செயல்படுத்தப்படும் என்றாா்.
ஆய்வின்போது, சமூக நலன்- மகளிா் உரிமை துறை அமைச்சா் பெ.கீதாஜீவன், அரசு செயலா்கள் செல்வராஜ், மன்கத் ராம் சா்மா, ஆட்சியா் க. இளம்பகவத், மேயா் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையா் லி.மதுபாலன், எம்எல்ஏ எம்.சி.சண்முகையா, மாவட்ட வருவாய் அலுவலா் ச.அஜய் சீனிவாசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

