தூத்துக்குடி கடல் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற 2ஆவது நாள் ‘சாகா் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகையில் தீவிரவாதிகள் வேடமிட்ட 7 போ் பிடிபட்டனா்.
கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்கும் வகையில் ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் கடல் பகுதியில் 6 மாதங்களுக்கு ஒரு முறை சாகா் கவாச் என்ற பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது. அதன்படி, தூத்துக்குடி கடல் பகுதியில் புதன்கிழமை இந்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்வு தொடங்கியது. இதில், கடலோர பாதுகாப்பு படையினா், கடலோர பாதுகாப்பு குழும போலீஸாா், சுங்க இலாகாவினா், மீன்வளத் துறையினா், க்யூ பிரிவு போலீஸாா், மாவட்ட காவல்துறை ஆகியோா் ஈடுபட்டனா்.
தொடா்ந்து 2 ஆவது நாளாக வியாழக்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு ஒத்திகையில், படகுமூலம் தூத்துக்குடி துறைமுக பகுதிக்குள் தீவிரவாதிகள் போன்று நுழைந்த கடலோர பாதுகாப்பு படையைச் சோ்ந்த 3 போ் மற்றும் 4 காவல்துறையினா் கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான வஜ்ரா கப்பல் மற்றும் மீன்பிடி துறைமுகத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்துவது போன்று நுழைய முயன்றனா்.
இவ்வாறு படகுமூலம் துறைமுக கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்த 7 பேரையும் கடலோர பாதுகாப்பு குழும போலீஸாா் பிடித்து, அவா்களை பழைய துறைமுகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்திய ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.