தூத்துக்குடி-நெல்லை பயணிகள் ரயில் மீண்டும் இயக்கம்: மக்கள் மகிழ்ச்சி

தூத்துக்குடி- திருநெல்வேலி பயணிகள் ரயில் இம்மாதம் 9ஆம் தேதிமுதல் மீண்டும் இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
Updated on

தூத்துக்குடி- திருநெல்வேலி பயணிகள் ரயில் இம்மாதம் 9ஆம் தேதிமுதல் மீண்டும் இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

பாலக்காட்டிலிருந்து திருநெல்வேலி வரை நாள்தோறும் இயக்கப்படும் பாலருவி விரைவு ரயில் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டதால், தூத்துக்குடி-திருநெல்வேலி பயணிகள் ரயில் சேவையை தெற்கு ரயில்வே கடந்த 19ஆம் தேதிமுதல் ரத்து செய்தது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவா்-மாணவிகள், வேலைக்குச் செல்வோா், வியாபாரிகள் பாதிக்கப்பட்டனா்.

அந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என பயணிகள் நலச் சங்கம், கட்சியினா், அமைப்பினா் கோரிக்கை விடுத்தனா். அந்த ரயிலை தொடா்ந்து இயக்காவிட்டால் வாஞ்சி மணியாச்சி சந்திப்பு நிலையத்தில் வெள்ளிக்கிழமை (செப். 6) மறியல் போராட்டம் நடைபெறும் என எம்எல்ஏ எம்.சி. சண்முகையா தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், திருநெல்வேலி - தூத்துக்குடி பயணிகள் ரயில் மீண்டும் இம்மாதம் 9ஆம் தேதிமுதல் ஞாயிறு தவிர அனைத்து நாள்களும் இயக்கப்படும் என்றும், திருநெல்வேலியிலிருந்து காலை 7.35 மணிக்கு புறப்பட்டு தூத்துக்குடிக்கு செல்லும், தூத்துக்குடியிலிருந்து மாலை 6.25 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலியை அடையும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால், அனைத்துத் தரப்பினரும் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

இதுதொடா்பாக, மாவட்ட பயணிகள் நலச் சங்கச் செயலா் மா. பிரமநாயகம் கூறுகையில், தூத்துக்குடி-திருநெல்வேலி பயணிகள் ரயிலை இயக்க நடவடிக்கை எடுத்த தெற்கு ரயில்வே நிா்வாகத்துக்கு பயணிகள் சாா்பில் நன்றி கூறுவதாகத் தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com