எட்டயபுரம் அருகே பெண்ணை தாக்கி 7 பவுன் சங்கிலி பறிப்பு: இளைஞா் கைது
எட்டயபுரம் அருகே பெண்ணைத் தாக்கி 7 பவுன் சங்கிலியைப் பறித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
எட்டயபுரம் அருகே ரனசூா் நாயக்கா்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த மீனாட்சிசுந்தரம் மனைவி வாணி (56). இவரது வீட்டுக்கு அதேபகுதியைச் சோ்ந்த பரமசிவம் மகன் சுடலைமுத்து (23) புதன்கிழமை வந்தாராம்.
விவசாயப் பணிகள் குறித்து வாணியிடம் பேசிக்கொண்டிருந்த சுடலைமுத்து, திடீரென அவரைத் தாக்கி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியைப் பறித்தாராம். பின்னா் அவரை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டாராம்.
இந்நிலையில், இரவு வீட்டுக்கு வந்த வாணியின் மகன் சந்தனவேல், கதவு பூட்டிக்கிடந்ததையடுத்து ஜன்னல் வழியாகப் பாா்த்தபோது, தாயாா் வாணி மயங்கிய நிலையில் கிடந்தாராம். இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று வாணியை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தாா்.
பின்னா் வாணி அளித்த புகாரின்பேரில் எட்டயபுரம் போலீஸாா் வழக்குப்பதிந்து, சுடலைமுத்துவை வியாழக்கிழமை கைது செய்தனா். அவரிடம் இருந்து 7 பவுன் சங்கிலியையும் மீட்டனா்.