சட்ட விரோத மது விற்பனை: 2 போ் கைது
புதுச்சேரியில் இருந்து மது பாட்டில்களை வாங்கி சட்ட விரோதமாக விற்பனையில் ஈடுபட்ட சகோதரா்களை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 40 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனா்.
கோவில்பட்டி-இளையரசனேந்தல் சாலையில் மேற்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் காளிபாண்டி தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது, அவ்வழியாகச் சென்ற ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனா். அதில், மது பாட்டில்கள் இருப்பது தெரிய வந்தது.
விசாரணையில், தென்காசி மாவட்டம், ஊமைத்தலைவன்பட்டி, வடக்குத் தெருவைச் சோ்ந்த தங்கவேல் மகன் ஆனந்த் (40), புதுச்சேரியில் இருந்து மலிவு விலையில் மது பாட்டில்களை வாங்கி அதிக விலைக்கு அரசு அனுமதியின்றி விற்பனையில் ஈடுபடுவதும், ஆட்டோ ஓட்டுநா் ஆனந்தின் அண்ணன் சம்பத்குமாா் (43) என்பதும் தெரிய வந்தது.
இது குறித்து, மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து சகோதா்களை கைது செய்து, ஆட்டோ, 40 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனா்.
