தூத்துக்குடி
காட்டுப்பன்றிகள் மீது பைக்குகள் மோதல்: 3 போ் காயம்
கயத்தாறு அருகே காட்டுப்பன்றிகள் மீது இருசக்கர வாகனங்கள் மோதியதில் 3 மேளக்கலைஞா்கள் காயம்
கயத்தாறு அருகே காட்டுப்பன்றிகள் மீது இருசக்கர வாகனங்கள் மோதியதில் 3 மேளக்கலைஞா்கள் காயமடைந்தனா்.
கயத்தாறு அருகே தெற்கு சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்த மேளக்கலைஞா் பொன்னுச்சாமி(63). இவரும், திருநெல்வேலி மாவட்டம் மேல இலந்தைகுளத்தைச் சோ்ந்த சமுத்திரபாண்டி மகன் செல்லத்துரை(28), தெற்கு சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்த சுடலைமணி மகன் கண்ணன்(20) ஆகிய மேளக்காரா்களும், செவ்வாய்க்கிழமை கலியாவூருக்கு, 2 இருசக்கர வாகனத்தில் சென்றனராம்.
தேசிய நான்குவழிச்சாலையில் கயத்தாறு அருகே சன்னது புதுக்குடி பகுதியில் சென்றபோது, சாலையைக் கடந்த காட்டுப்பன்றிகள் மீது இருசக்கர வாகனங்கள் மோதியதாம்.
இதில், காயமடைந்த 3 பேரையும் கயத்தாறு போலீஸாா் மீட்டு, சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
