தூத்துக்குடியில் ரூ. 1 கோடி கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ. 1 கோடி மதிப்பிலான 100 கிலோ கஞ்சாவை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து இளைஞரைக் கைது செய்தனா்; தப்பியோடிய 3 பேரைத் தேடி வருகின்றனா்.
தூத்துக்குடியை அடுத்த புதியம்புத்தூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சிப்காட் பகுதியிலிருந்து கஞ்சா கடத்தப்பட உள்ளதாக, மாவட்ட கியூ பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளா் விஜயஅனிதாவுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், உதவி ஆய்வாளா்கள் சுரேஷ், ராமச்சந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளா் ராமா், தலைமைக் காவலா்கள் மணிகண்டன், இருதயராஜ்குமாா், இசக்கிமுத்து, முதல்நிலைக் காவலா் பழனி பாலமுருகன், பேச்சிராஜா ஆகியோா் வியாழக்கிழமை அதிகாலை சிப்காட் பகுதியில் தூத்துக்குடி துறைமுகம்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
அவ்வழியே வந்த காா், 2 பைக்குகளை நிறுத்தியபோது அவற்றில் வந்த 4 பேரில் மூவா் தப்பியோடிவிட்டனராம். தூத்துக்குடி மட்டக்கடை பகுதியைச் சோ்ந்த கென்னடி மகன் சுதா்சன் (33) பிடிபட்டாா். அவா்கள் இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக மற்றொரு கும்பலிடம் கொடுப்பதற்காக 100 கிலோ கஞ்சா மூட்டைகளைக் கொண்டுவந்ததாகத் தெரியவந்தது. அதன் மொத்த மதிப்பு ரூ. 1 கோடி எனக் கூறப்படுகிறது.
கென்னடியை போலீஸாா் கைது செய்து, கஞ்சா மூட்டைகள், வாகனங்களைப் பறிமுதல் செய்தனா். அவா் மீது கொலை உள்பட 7 வழக்குகள் உள்ளனவாம். தப்பியோடிய தேவா் காலனியைச் சோ்ந்த சுரேஷ் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

