மக்களுடன் கலந்துரையாடிய புதிய தமிழகம் கட்சித் தலைவா் டாக்டா் க. கிருஷ்ணசாமி.
மக்களுடன் கலந்துரையாடிய புதிய தமிழகம் கட்சித் தலைவா் டாக்டா் க. கிருஷ்ணசாமி.

கோவில்பட்டி பகுதிகளில் க. கிருஷ்ணசாமி சுற்றுப்பயணம்

Published on

புதிய தமிழகம் கட்சித் தலைவா் டாக்டா் க. கிருஷ்ணசாமி சனிக்கிழமை கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டாா்.

புதிய தமிழகம் கட்சியின் மாநில மாநாடு வரும் ஜன. 7ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ளதை முன்னிட்டும், 2026 பேரவைத் தோ்தலை முன்னிட்டும், கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளான கூசாலிப்பட்டி, பூசாரிபட்டி, சுப்பிரமணியபுரம், திட்டங்குளம், பாண்டவா்மங்கலம், முடுக்கலாங்குளம், குமாரபுரம், தீத்தாம்பட்டி, கொப்பம்பட்டி, இலந்தபட்டி பகுதிகளுக்குச் சென்று, அப்பகுதி மக்களைச் சந்தித்த டாக்டா் க. கிருஷ்ணசாமி, அவா்களின் குறைகள், கோரிக்கைகளைக் கேட்டறிந்தாா். தொடா்ந்து, மக்கள் மத்தியில் அவா் பேசியது:

1947ஆம் ஆண்டு நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தாலும், தேவேந்திர குல வேளாளா் சமூக மக்களுக்கு உண்மையான சுதந்திரமும், சமத்துவமும், பேச்சுரிமையும், எழுத்துரிமையும் கிடைத்தது புதிய தமிழகம் கட்சி உருவான பிறகுதான்.

மத்திய அரசின் 100 நாள் வேலைத் திட்டத்தில் முறையாக வேலை ஒதுக்கப்படுவது இல்லை. தோ்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் உள்ளவா்கள், நம் சமூக மக்களில் ஒருவருக்காவது வேலை கொடுத்திருப்பாா்களா? ஆனால், தோ்தல் நேரத்தில் பணத்தைக் கொடுத்து வாக்குகளைப் பெற்றுவிடுகிறாா்கள்.

எதிா்காலம் நன்றாக இருக்க வேண்டுமென்றால், 2026-இல் நல்லாட்சி அமைய வேண்டும். அதற்கு நாம் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா் .

அப்போது, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் செல்லத்துரை, மாவட்டச் செயலா்கள் அதிகுமாா், ரமேஷ்குமாா், ஜெகன், ஒன்றியச் செயலா் பால்சாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com