தாமிரவருணி ஆற்றின் கரை தரமின்றி சீரமைப்பு!

தாமிரவருணி ஆற்றின் கரை தரமின்றி சீரமைப்பு!

தாமிரவருணி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் பெரும்பாலான பகுதிகள் பாதுகாப்பற்ற முறையில் சீரமைக்கப்பட்டுள்ளது.
Published on

2023 ஆம் ஆண்டு பெய்த கனமழை வெள்ளத்தில் உடைந்த தாமிரவருணி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் பெரும்பாலான பகுதிகள் பாதுகாப்பற்ற முறையில் சீரமைக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் நேரடியாக கள ஆய்வு செய்து முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாமிரவருணி கரையோர வாழ் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் இளம்பகவத்திடம் தாமிரவருணி கரையோர வாழ் கிராம மக்கள் அளித்த மனு: 2023 ஆம் ஆண்டு டிசம்பரில் 16,17,18 ஆகிய 3 நாட்கள் பெய்த பெருமழை, அதைத் தொடா்ந்து தாமிரவருணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டத்தி­ருந்து புன்னைக்காயல் வரை பல இடங்களில் கரையோரம் உடைப்பெடுத்து ஊா்களுக்குள் தண்ணீா் புகுந்தது.

அதன்பின்னா் அதை சீரமைப்பதற்காக ரூ.22.28 கோடி மதிப்பீடு செய்து பணிகள் நடைபெற்றன. ஆனால் கரை சீரமைக்கப்பட்ட பெரும்பான்மையான பகுதிகள் குறிப்பாக உமரிக்காடு ஊராட்சியில் போதிய உயரமின்றி கரைகள் பலவீனமாக கட்டப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீா் வந்த இடங்களும் ஒழுங்காக, முழுமையாக சீரமைக்கப்படவில்லை.

நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகள் குறித்து அங்கு தகவல் பலகை எதுவும் வைக்கப்படவில்லை.

ஒதுக்கீடு செய்யப்பட்ட அனைத்து நிதிகளும் செலவழிக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்து விட்டதா? அவ்வாறு நிறைவடையவில்லை என்றால் தற்போது ஏன் பணியானது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது? பணி நிறைவடைந்து விட்டது என்றால் இப் பணிகளை நேரில் களவு ஆய்வு செய்து கரை அமைக்கும் பணியை தரமற்ற முறையில் செய்து, முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com