நல்லூா் ஊராட்சியில் 4 ஆண்டுகளில் 120 திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத்
நல்லூா் ஊராட்சியில் 4 ஆண்டுகளில் 120க்கும் மேற்பட்ட திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.
குரும்பூா் அருகிலுள்ள நல்லூா் ஊராட்சியில், உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் ஆட்சியா் க. இளம்பகவத் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் அவா் பேசியதாவது:
நல்லூா் உராட்சியில் உள்ள 876 வீடுகளில் 215 வீடுகளுக்கு ஏற்கெனவே குடிநீா் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 520 வீடுகளுக்கு குடிநீா் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டில் நிதிக் குழு மானியத்தின் கீழ், 14 பணிகள் நடைபெற்றுள்ளன. 15ஆவது நிதிக் குழு மானியத்தின் கீழ், 2021-22ஆம் ஆண்டு 23 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கடந்த 4 ஆண்டுகளில் 120 பணிகளுக்கு மேல் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றாா் அவா். வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பாக ஒரு விவசாயிக்கு மண்புழு உரப்படுக்கையை ஆட்சியா் வழங்கினாா்.
கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) இரா. ஐஸ்வா்யா, மகளிா் திட்ட இணை இயக்குநா் நாகராஜன், வேளாண் துறை இணை இயக்குநா் பெரியசாமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் செந்தில்வேல் முருகன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சாந்தி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) மோகனதாஸ் செளமியன், திருச்செந்தூா் வட்டாட்சியா் தங்கமாரி, அரசு அலுவலா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

