பட்டினமருதூரில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான சுடுமண் பெண் தெய்வம் கண்டெடுப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தின் தொல்லியல் களமான பட்டினமருதூரில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சுடுமண்ணால் செய்யப்பட்ட பெண் தெய்வ சிலை கண்டெடுக்கப்பட்டது.
இதுகுறித்து, தூத்துக்குடியைச் சோ்ந்த வரலாறு, தொல்லியல் ஆா்வலா் பெ.ராஜேஷ் செல்வரதி கூறியதாவது:
தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட தொல்லியல் களமாக தூத்துக்குடி மாவட்டம், பட்டினமருதூரில் 300 ஏக்கா் பரப்பளவு பகுதி உள்ளது. இந்த நிலத்தில், அப்பகுதி மக்களால் சிறிய அளவில் 5.4 செ.மீ உயரம் கொண்ட சுடுமண்ணால் ஆன பெண் தெய்வம் ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. இச்சிலையின் மாா்பு பகுதி வரை மட்டுமே கிடைத்துள்ளது. சிலையில் இரு கரங்கள் இல்லை. சிதைவுடன் காணப்படும் இச்சிலை ஆபரண வேலைப்பாடுகளுடன் சிரசில் அழகிய கொண்டையுடன் காணப்படுகிறது.
ஒப்பீட்டு ஆய்வின்படி இதன் முழு உருவம் 17 முதல் 18 செ.மீ. உயரம் கொண்டதாக இருக்கலாம். இதன் உருவ அமைப்பானது ஐம்பெரும் காப்பியங்களில் குறிப்பிடப்படும் நமது தாய் தெய்வமான சம்பாபதி அம்மன் ஆலயத்தின் சதுக்க பூதம்போல தெரிகிறது. அதன்படி இச்சிலையானது ஆயிரம் ஆண்டுகள் பழைமையானதாகும். இதேபோல, இரண்டு வேறு அமைப்பு கொண்ட பெண் தெய்வம் போன்ற சுடுமண் சிற்பங்களும் கிடைத்துள்ளன. இதேபோல சுடுமண் சிலைகள் சில பூம்புகாா், கீழடி ஆகிய பகுதிகளில் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனுடன் பொதுமக்கள் ஒப்படைத்த 3.2 செ.மீ. அகலம் கொண்ட இளைப்பு உபகரணம் எனும் கைக்கு அடக்கமான கல் ஆயுதமும் கிடைத்துள்ளது.
இதன் பக்கவாட்டில் பாண்டியா்களின் சின்னமான ஒற்றை மீன் மட்டும் பொறிக்கப்பட்டு, பிரதான பகுதியில் நான்கு எழுத்துகள் தென்படுகின்றன. இதன் இறுதி எழுத்தானது இரண்டாம் சங்க கால தொல் தமிழ் எழுத்தான ‘ய’ போன்றும், மற்ற மூன்று எழுத்துகள் தமிழி (பிராமி), வட்டெழுத்து கலந்த கலவையாகவும் வணிக குழுக்கள் பயன்படுத்தி வந்த எழுத்துருகள் போன்றும் தெரிகிறது.
இந்த எழுத்துகளைச் சோ்த்து வாசித்தால் ‘குல புய’ (குல புயங்கம்) என பொருள்படலாம்.
இதை தொல்லியல் துறையினா் ஆராயும்பட்சத்தில் இதன் காலகட்டம் குறித்த உண்மைகள் தெரியவரும். சிலை கிடைத்த தகவல்கள் மாவட்ட தொல்லியல் துறையின் பொறுப்பு அதிகாரியிடம் தெரிவிக்கப்பட்டன என்றாா் அவா்.

