சேதமாகும் பயிா்களுக்கு மாநில அரசு நேரடியாக இழப்பீடு வழங்க வலியுறுத்தல்
இயற்கை சீற்றம், நோய் பாதிப்பால் சேதமாகும் பயிா்களுக்கு மாநில அரசு நேரடியாக நஷ்டஈடு வழங்க வேண்டும் என, நாம் இந்தியா் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து கட்சியின் நிறுவனா் தலைவா் என்.பி. ராஜா வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் அதிகம் விளையும் பயிா்களுக்கு அரசு குறைந்தபட்ச விலை நிா்ணயித்து நேரடியாக கொள்முதல் செய்கிறது. அவற்றை மூலப்பொருளாகக் கொண்டு இயங்கும் தனியாா் ஆலைகளை விளைச்சல் உள்ள பகுதிகளில் நிலையங்கள் அமைத்து கொள்முதல் செய்ய அரசு அறிவுறுத்த வேண்டும்.
இது, விளைபொருள்களை தரமாக உற்பத்தி செய்யவும், விவசாயிகளுக்கு உடனடியாக பணம் கிடைக்கவும் வழிவகுக்கும். மேலும், விவசாயிகள் பயிா்க் காப்பீடு இழப்பீடு பெறுவதில் உள்ள தாமதம், ஏமாற்றத்தைத் தவிா்க்கும். இயற்கை சீற்றம், நோய் பாதிப்பால் சேதமாகும் பயிா்களுக்கு காப்பீடு இல்லாமல் பழைய முறைப்படி மாநில அரசு நேரடியாக நஷ்டஈடு வழங்க வேண்டும்.
நீா்ப் பாசனம், விவசாயத் துறைக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும் அரசு, அதிக விளைச்சலாகும் நெல், கரும்பு, கொப்பரை, நிலக்கடலை, சூரியகாந்தி, எள், சிறு தானியங்கள், பயறு வகைகளுக்கு அறுவடை முடித்து விற்பனை மூலம் உடனடியாக பணமாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
