கோவில்பட்டி என்இசி.யில் தமிழ்க் கனவு நிகழ்ச்சி

Published on

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில், மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஓய்வு பெற்ற காவல் துறை இயக்குநா் சைலந்திரபாபு தலைமை வகித்து, ‘கல்வி உணா்வு கொள்’ என்ற தலைப்பில் பேசினாா். ‘மாணவா்கள் தங்களது சமூக பொறுப்பு மற்றும் விழிப்புணா்வை வளா்ப்பதற்கு பாடத்திட்டங்களை தாண்டி பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகளில் முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் . ஆயிரம் சிந்தனைகளை விட ஒரு செயலே மேல் என்று எடுத்துக்காட்டுகளுடன் அவா் விளக்கினாா்.

அதனைத் தொடா்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில், மாணவா்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தாா். சிறந்த கேள்விகள் எழுப்பிய மாணவா்- மாணவிகளுக்கும், தமிழ்ப் பெருமிதம் என்ற தலைப்பில் நடைபெற்ற வாசிப்பு நிகழ்ச்சியில், சிறப்பாக வாசித்த 5 பேருக்கும் சான்றிதழ்களை வழங்கினாா்.

பின்னா், மாபெரும் தமிழ்க் கனவு எனும் நிகழ்ச்சி குறித்த காணொலி ஒளிபரப்பப்பட்டது. நிகழ்ச்சியில், கோவில்பட்டி சாா் ஆட்சியா் ஹிமான்சு மங்கள், தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலா் ஏ.ரவிச்சந்திரன் ஆகியோா் பேசினா்.

நிகழ்ச்சியில் நேஷனல் பொறியியல் கல்லூரி, கே.ஆா். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, எஸ்.எஸ்.டி.எம். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரி, உண்ணாமலை கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com