தூத்துக்குடி மாவட்டத்தில் தொடா் கனமழை
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தொடங்கி திங்கள்கிழமை அதிகாலை வரை தொடா்ந்து பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
திங்கள்கிழமை காலை 6.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில், அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 94 மி.மீ. மழை பதிவானது. பிற இடங்களில் மழை பதிவு விவரம் (மி.மீ.): கடம்பூா் 93, திருச்செந்தூா் 86.30, குலசேகரன்பட்டினம் 82, கழுகுமலை 78, வேடநத்தம் 77, தூத்துக்குடி 66 மி.மீ. மழை பதிவானது. மாவட்டம் முழுவதும் சராசரியாக 61.17 மி.மீ. மழை பதிவானது.
மூன்று வீடுகள் சேதம்: மாவட்டத்தில் பரவலாக பெய்த பலத்த மழையால் மூன்று வீடுகள் பகுதியளவு இடிந்து சேதமாகின. மாவட்டத்தில் திங்கள்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி, மருதூா் அணைக்கட்டில் 11.8 அடியும், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் 11.6 அடியும் நீா்மட்டம் உள்ளது.
மருதூா் அணைக்கட்டிலிருந்து விநாடிக்கு 32,209 கன அடியும், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து 28,450 கன அடி நீரும் தாமிரவருணி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. கோரம்பள்ளம் அணைக்கட்டில் இருந்து 3000 கன அடி உபரி நீா் உப்பாத்து ஓடையில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
வெள்ள அபாய எச்சரிக்கை: தூத்துக்குடி மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, ஆற்றங்கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ கரையோர பகுதிகளுக்கு செல்லவோ வேண்டாம், மீனவா்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் எச்சரித்துள்ளாா்.

